Editorial / 2026 மே 03 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

பூ. லின்ரன்
"எமது நிலத்தில் வாழ்ந்தபோது கம்பீரமாக நின்ற தேவாலயங்களும் இந்து ஆலயங்களும் இன்று எங்கே? எமது முன்னோர்களை அடக்கம் செய்த மயானங்களுக்கு என்ன நடந்தது?" என மயிலிட்டி இளைஞர் ஒருவர், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கண்ணீர் மல்கக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மயிலிட்டி பகுதியில் இடம்பெற்ற நில மீட்புக்கான கவனயீர்ப்புப் போராட்டத்தின் போதே, பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக அவர் இந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அந்த இளைஞர், இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களின் தற்போதைய அவலநிலை குறித்துப் பின்வருமாறு விவரித்தார்:
சிதைக்கப்பட்ட ஆலயங்கள்:

"2010ஆம் ஆண்டு இராணுவப் பாதுகாப்புடன் வழிபாட்டுக்காகச் சென்றபோது முழுமையாக இருந்த தேவாலயங்கள் மற்றும் கோவில்கள், இன்று அத்திவாரம் கூடத் தெரியாத அளவிற்குச் சிதைக்கப்பட்டுள்ளன."
மறைக்கப்பட்ட சுவடுகள்:

"2013ஆம் ஆண்டிற்குப் பின்னர் படிப்படியாகச் சில பகுதிகள் விடுவிக்கப்பட்டபோது, அங்கு சென்று பார்த்த எமக்கு அதிர்ச்சியே மிஞ்சியது. வழிபாட்டுத் தலங்கள் இருந்த இடங்கள் தற்பொழுது வெறும் பற்றைக்காடுகளாகக் காட்சி அளிக்கின்றன."
கல்வி நிறுவனங்கள் பாதிப்பு:

"தேவாலயங்களையும் அருகில் இருந்த பாடசாலைகளையும் அழிக்கும் அளவிற்கு அவை இராணுவத்தினருக்கு என்ன தீங்கிழைத்தன?" என அவர் கேள்வி எழுப்பினார்.
"இறந்தால் அடக்கம் செய்ய இடமில்லை"

மயானங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்துப் பேசிய அவர்:
"எனது குடும்பத்தில் ஒருவர் இறந்தால் அவர்களை எங்கே அடக்கம் செய்வது? சொந்த மண்ணில் எமது உறவுகளைப் புதைக்கக்கூட இடமில்லாமல் தவிக்கிறோம். எனது தாய், தந்தையை 36 வருடங்களாக இந்த மண்ணில் வாழ விடவில்லை; அவர்கள் அகதிகளாகவே அலைந்து திரிந்துவிட்டார்கள். சாகும் போதாவது தங்களது சொந்த மண்ணில் சில காலமாவது வாழ்ந்துவிட்டு இறக்க வேண்டும் என்பதே எமது ஆசை."என வேதனை தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட கோரிக்கை:

தற்போது பதவியேற்றுள்ள புதிய அரசாங்கம், மயிலிட்டி மக்களின் நீண்டகாலத் துயரைப் புரிந்துகொண்டு, இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள எஞ்சிய நிலங்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.
இக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டு, தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தினர்.









1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago