2026 மே 12, செவ்வாய்க்கிழமை

ஏயார்பஸ் ஊழல்: மஹிந்த ராஜபக்ஷ ஆணைக்குழுவில் ஆஜரானார்

Editorial   / 2026 மே 12 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு 2013ஆம் ஆண்டு 10 விமானங்களைக் கொள்வனவு செய்தபோது, 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன ஆகியோர் இன்று (12)இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு விற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன, முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் புதல்வர் ஷமீந்திர ராஜபக்ஷ மற்றும் கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி ஆகியோர் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் கடந்த 05ஆம் திகதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோதே, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இந்தத் தகவல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

ஏப்ரல் 30ஆம் திகதி அனுப்பப்பட்ட அறிவித்தலுக்கு அமைய, மஹிந்த ராஜபக்ஷ இன்றைய தினம் (மே 12) ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேர்தல் பிரசாரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட இலஞ்சப் பணம்:
ஏயார்பஸ் (Airbus) கொடுக்கல் வாங்கலின் மூலம் கிடைத்ததாகக் கூறப்படும் இலஞ்சப் பணம், மஹிந்த ராஜபக்ஷவின் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக தென் மாகாண முன்னாள் ஆளுநர் வில்லி கமகேவிடம் நேற்று (11) சுமார் நான்கு மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்:

கடந்த 05ஆம் திகதி நீதிமன்றத்தில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன்வைத்த ஏனைய முக்கிய தகவல்கள் பின்வருமாறு:

மஹிந்த ராஜபக்ஷவின் 2015 தேர்தல் பிரசாரக் காரியாலயம், சந்தேகநபரான ஷமீந்திர ராஜபக்ஷவின் வழிகாட்டலிலும் வில்லி கமகேயின் தலைமையிலும் இயங்கியுள்ளது.

இந்த ஊழல் பணம் 'சதிசி' (Sadisi) எனும் ஊடக நிறுவனத்தின் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூரின் 'பிஸ் சொல்யூஷன்' (Biz Solution) நிறுவனம் மூலம் ஸ்டாண்டர்ட் சார்டட் வங்கி ஊடாக இலங்கையின் 'அகோ' (Ago) எனும் நிறுவனத்திற்குப் பணம் அனுப்பப்பட்டுள்ளது.

அங்கிருந்து காசோலைகள் மூலம் 'சதிசி மீடியா கிரியேஷன்' நிறுவனத்தின் பங்குதாரரான சமரவிக்ரமகே சமன் சம்பத் என்பவருக்குப் பணம் கைமாறியுள்ளது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குறித்த பணம் 2015 ஜனாதிபதி தேர்தலுக்காகச் செலவிடப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஷமீந்திர ராஜபக்ஷவின் மேற்பார்வையில் இடம்பெற்ற பிரசாரப் பணிகளுக்காக, ஒரு சந்தர்ப்பத்தில் மாத்திரம் 9 மில்லியன் ரூபாய் பெறுமதியான காசோலை பெறப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளதாக ஆணைக்குழு நீதிமன்றில் தெரிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .