Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 நவம்பர் 02 , மு.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.பி.மதன்
சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய கூட்டணி ஒன்றினை உருவாக்கும் முயற்சிகள் மும்முரமாக இடம்பெற்றுவருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்தி தெரிவிக்கிறது.
தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்ற தோரணையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றபோதிலும் அக்கூட்டமைப்பின் அண்மைக்காலச் செயற்பாடுகளினால் மனமுடைந்துபோயுள்ளவர்களை ஒன்றிணைத்து, புதியதொரு கூட்டணியினை உருவாக்கும் முயற்சியில் சில முக்கிய புள்ளிகள் செயற்பட்டு வருவதாகவும், அம்முயற்சியில் பாரிய முன்னேற்றம் தென்படுவதாகவும் அச்செய்தி மேலும் தெரிவிக்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலவீனத்தினைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியின் விடாமுயற்சியினால், முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் உள்ளிட்ட சிலரை தம்வசம் அவர் வளைத்துப்போட்டுள்ளார். இம்முயற்சியில் அடுத்தகட்டமாக வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிருப்தியாளர்களை ஒன்றிணைக்கும் முயற்சியும் தொடர்ந்தவண்ணம் இருக்கின்றன.
ஆனந்தசங்கரியுடன் இணையவுள்ளார்கள் என சுரேஷ் பிரேமச்சந்திரன், அனந்தி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் போன்றோரின் பெயர்கள் அடிபடுகின்றபோதிலும் அவைபற்றிய உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் எதுவும் வெளிவரவில்லை. இவ்வூகங்களைச் சிலர் மறுத்தும் அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர்.
இந்நிலையில்தான், ஏனைய சிறுபான்மைக் கட்சிகளை ஒன்றிணைத்து பலமான சக்தியாக மாற்றும் முயற்சிகள் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுபான்மைக் கட்சிகளுடன் தலைநகரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுபான்மைக் கட்சிகளையும் ஒன்றிணைத்தே இந்தப் புதிய கூட்டணி உருவாக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இக்கூட்டணி முயற்சி வெற்றியளிக்குமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் கட்சிகளில் சிலவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று, புதிய கூட்டணியுடன் இணைந்து செயற்படக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏகாதிபத்திய நடவடிக்கைகளில் அதிர்ப்தியுற்றுள்ள சில சக்திகளே இப்புதிய கூட்டணியினை உருவாக்கும் முயற்சியில் மும்முரமாக இறங்கியுள்ளதாகவும் தெரியவருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .