Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 ஜனவரி 10 , மு.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
அழகன் கனகராஜ்
2017ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற கூட்டத்தொடரின் மங்கல அமர்வு, சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், நேற்றுக் காலை 9:30க்கு கூடியது.
மங்கல அமர்வை, காலை 10 மணி வரை மட்டுமே நடத்துவதற்கு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருந்து. எனினும், நேற்றைய அமர்வானது, 10:45க்கே நிறைவடைந்தது.
சபையின் பிரதான நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கு அதிகளவான நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. பிரதான நடவடிக்கைகள் 9:45 வரையிலும் நீண்டு சென்றன. பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், ஹம்பாந்தோட்டை விவகாரம் தொடர்பில், ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரான தினேஷ் குணவர்தன, விசேட கூற்றொன்றை விடுத்து கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தார். நேரம் காலை 10 மணிக்கு நெருங்கிக்கொண்டிருந்ததை அவதானித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, சபை நடவடிக்கைகளுக்கான நேரத்தை ஒதுக்கித்தர, அவையின் அனுமதியை கேட்டார். அதற்கு, சபையின் அனுமதி கிடைத்ததையடுத்தே, சபை நடவடிக்கைகள், காலை 10:45 வரையிலும் நடத்தப்பட்டன.
தினேஷ் குணவர்தன எம்.பி கேள்வியெழுப்பியதை அடுத்து, அக்கேள்விகளுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளித்தார். அதனையடுத்து, ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தமையால், சபையே சூடுபிடித்தது.
இந்த கருத்து மோதல்களுக்குள், ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்தன, விமல் வீரவன்ச, டலஸ் அலகப்பெரும ஆகியோர், வாதப்பிரதிவாதங்களை முன்வைத்தனர். எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான அநுர குமார திஸாநாயக்கவும் கருத்துரைத்தார்.
ஆளும் தரப்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, கபீர் ஹாசிம், ரவி கருணாநாயக்க, சாகல ரத்நாயக்க, மஹிந்த அமரவீர மற்றும் எம்.பியான நளின் பண்டார ஆகியோரும் தமது தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.
இந்த வாதப்பிரதிவாதங்களினால், அவையே சூடு பிடித்திருந்தது. ஹம்பாந்தோட்டையில் வீடுகளுக்கு புகுந்து கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டதாக, நாமல் எம்.பி குற்றஞ்சாட்டினார்.
அக்குற்றச்சாட்டை மறுத்த, அமைச்சர் சாகல ரத்நாயக்க, நாட்டுத்தலைவரின் பாதுகாப்பு முக்கியமானதாகும். அந்தக் கூட்டத்தில் பிரதமர் பங்குபற்றியிருந்தார் என்பதை நினைவு கொள்ளவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
ஹம்பாந்தோட்டையின் ஆர்ப்பாட்டத்தின் மீது, கொழும்பிலிருந்து சென்ற குண்டர்களினாலேயே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும் ரவி கருணாநாயக்கவின் குண்டர்களே அவர்கள் என்றும், பந்துல எம்.பி குற்றஞ்சாட்டினார்.
இதன்போது எழுந்த, அமைச்சர் ரவி கருணாநாயக்க, “ஹம்பாந்தோட்டைக்கு, கொழும்பிலிருந்து குண்டர்களை அழைத்துச்செல்லவேண்டிய அவசியமே இல்லை. அங்கு குண்டர்கள் இருக்கின்றனர். ஹம்பாந்தோட்டைக்கு நாங்கள் சென்றிருந்தபோது, அங்கிருந்த குண்டர்களே எம்மீது தாக்குதல் நடத்தினர்” என்றார்.
சற்றுக் கோபமடைந்த பந்துல எம்.பி, தன்னுடைய பொக்கெட்டிலிருந்து ஏதோவொன்றை எடுத்து, இந்த அடையாள அட்டைக்கு உரியவர், கொழும்பில் இருக்கிறார். அவருடைய அடையாள அட்டையை எப்படி ஹம்பாந்தோட்டையிலிருந்து கண்டெடுக்க முடியும் என்று கேட்டார்.
எனினும், வாதப்பிரதிவாதங்கள் நீண்டு செல்வதற்கு இடமளிக்காத சபாநாயகர் கரு ஜயசூரிய, சபையை அடுத்த கட்ட நடவடிக்கைக்கு நகர்த்திச் சென்றார்.
அவைநடுவே தூக்கி வீசினார்
நாடாளுமன்றத்தின் நேற்றைய அமர்வு, சூடுபிடித்திருந்த நிலையில், ஆளும் மற்றும் எதிர்த் தரப்பினர் கருத்துகளை முன்வைத்தனர்.
சில சமயங்களில் கருத்துமோதல்களும் இடம்பெற்றன. ஒரு சந்தர்ப்பத்தில் எழும்பிய, பிரதமரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சட்டமூலமொன்றைச் சமர்ப்பித்தார்.
அதனையடுத்து எழுந்த, சபைமுதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, சபை நடவடிக்கையை, இம்மாதம் 24ஆம் திகதி வரையிலும் ஒத்திவைத்தார்.
எனினும், ஒன்றிணைந்த எதிரணியினர் எழும்பியிருந்து, கோஷங்களை எழுப்பியதுடன் ஒழுங்குப் பிரச்சினைகளையும் கிளப்பினர். எனினும், ஆளும் தரப்பினர், அதற்கு இடமளிக்கவில்லை. சபை ஒத்திவைக்கப்பட்டதன் பின்னர், எதனையும் செய்யமுடியாதென ஆளும் தரப்பினர் கூச்சலிட்டனர். இச்சந்தர்ப்பத்தில், சபாநாயகர் கரு ஜயசூரிய, தனது அக்கிராசனத்திலிருந்து எழும்பினார். செங்கோலைத் தூக்குவதற்கு படைகலசேவிதரும் ஓடோடிவந்தார். கடுமையாகக் கோபமடைந்த ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரான தினேஷ் குணவர்தன, தனது கையில் வைத்திருந்த ஒழுங்குப் பத்திரத்தை, சபைநடுவே தூக்கியெறிந்தார்.
பிரதமரினால் நேற்றையதினம் சமர்ப்பிக்கப்பட்ட அந்தச் சட்டமூலத்தில், நிலைபெறுதகு அபிவிருத்திப் பேரவையொன்றை ஸ்தாபிப்பதற்காக மற்றும் அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கான சட்டமூலம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வாழ்த்துக்கூறிய கரு ஜயசூரிய
2017ஆம் ஆண்டுக்கான, நாடாளுமன்றத்தின் நேற்றைய அமர்வின் போது, சபையின் பிரதான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர்,
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட சகலருக்கும், தன்னுடைய புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகக் கூறினார்.
இதன்போது, அவையிலிருந்த உறுப்பினர்களில் சிலர், தங்களுடைய மேசைகளில் தட்டி பதில்வாழ்த்தைத் தெரிவித்தனர்.
அதன்பின்னர், காலை 9:45 மணிவரையிலும், பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்றன.
மஹிந்தவும் இல்லை அவரும் இல்லை
2017ஆம் ஆண்டுக்கான, நாடாளுமன்ற அமர்வு, சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்றுக் காலை 9:30க்கு கூடியது.
நேற்றைய அமர்வின் போது, ஒன்றிணைந்த எதிரணியின் ஆசனங்கள் நிரம்பியிருந்தன.
ஆளும் கட்சியின் ஆசனங்கள் பல வெறிச்சோடிக் காணப்பட்டன. எதிரணியின் பக்கம், ஏனைய கட்சிகளின் ஆசனங்கள் ஓரளவுக்கு நிரம்பியிருந்தன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான அநுர குமார திஸாநாயக்க ஆகியோர் பிரசன்னமாகி இருந்தனர்.
எனினும், முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ சமுகமளித்திருக்கவில்லை. அதேபோல, தன்னுடைய இராஜங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ள பிரியங்கர ஜயரட்னவும், நேற்றைய அமர்வுக்குச் சமுகமளித்திருக்கவில்லை.
எதிரணிக்கு வந்த ரணில்
நாடாளுமன்றத்தின் நேற்றைய அமர்வு நிறைவடைந்த நிலையில், எதிரணி பக்கம் இருந்த, ஆளுங்கட்சி எம்.பிக்கள், ஆளும் கட்சியின் பக்கமாக சென்று சக உறுப்பினர்களுடன் கைலாகு கொடுத்து அளவலாவிக்கொண்டிருந்தனர்.
கோஷங்களை எழுப்பிக்கொண்டிருந்த ஒன்றிணைந்த எதிரணியினர், ஆளும் தரப்பைப் பார்த்து, கைகளை நீட்டி ஏதோதோ கூறிக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், அவைக்குக் குறுக்காக எதிர்க்கட்சியின் பக்கமாக வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சியின் பிரதமர கொறடாவும் எம்.பியுமான அநுர குமாரவிடம் ஏதாதோ கூறிவிட்டு, ஆளும் பக்கமாகச் சென்று, அவையிலிருந்து வெளியேறிவிட்டார்.
பிரதமரின் கருத்துக்கு அல்லது அழைப்புக்கு சம்மதம் தெரிவிப்பதைப் போலவே, அநுர குமார எம்.பியும் தலையசைத்தார்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago