2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கடற்படை அதிகாரியின் விளக்க மறியல் நீடிப்பு

Kogilavani   / 2017 ஜனவரி 27 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா திபான்   

கொழும்பை அண்மித்த பகுதியில், இருவர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கடற்படை அதிகாரியை, பெப்ரவரி மாதம் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு பிரதான நீதிமன்றம், நேற்று (26) உத்தரவிட்டது.  

கொழும்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜெயராம் ட்ரொஸ்கி முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு  எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தயானந்த நாணயக்கார, ஆனந்த குருகே ஆகிய கடற்படை அதிகாரிகளைக் கைது செய்யவேண்டியுள்ளதாகவும் முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுரல சேனநாயக்கவிடம் வாக்குமூலம் பெறவேண்டியுள்ளதாகவும் மன்றுக்கு அறிவித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சந்தேகநபரின் விளக்கமறியலை நீடிக்குமாறும் கேட்டுக்கொண்டனர்.  

பக்கரிசாமி லோகநாதன், இரத்தினசாமி பரமானந்தன் ஆகியோர், 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதமளவில் வானொன்றில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாகவும் அந்தக் கடத்தற் சம்பவத்துடன் தொடர்புடைய வான், வெலிசறை கடற்படை முகாமுக்குப் பின் பகுதியில் இருந்தாகவும் விசாரணைகளில் இருந்து தெரிய வந்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மன்றுக்குத் தெரிவித்தனர்.  

அந்த விசாரணைகளை அடுத்தே, அந்தக் காலப்பகுதியில் வெலிசற முகாமின் அதிகாரியாக இருந்தவரும் தற்போது, கடற்படை லெப்டின் கொமாண்டராக உள்ளவருமான தம்மிக அனில் மாபா என்பவர், 2017.01.14 அன்று கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.  

கடத்தல் சம்பவம் தொடர்பில், கொட்டாஞ்சேனை பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, கொழும்பு குற்றப் பிரிவின் உப பரிசோதகரான விஜேசிங்கவுக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.   

அவர்களின் விசாரணையில், கடத்தப்பட்டவர்களில் ஒருவரான லோகநாதன் என்பவரின் அலைபேசியில் சிம் அட்டை மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டமை தெரியவந்தாகவும் அலைபேசியைப் பயன்படுத்திய நபரை கொழும்பு குற்றப் பிரிவுக்கு ஆஜராகுமாறு அழைத்தபோதும் அவர் ஆஜராகியிருக்கவில்லை எனவும் சி.ஐ.டி அதிகாரியான நிஷாந்த சில்வா, மன்றுக்கு அறிவித்தார்.  

வெலிசறை முகாமுக்குப் பின்னால் வான் ஒன்று இருப்பதாக சி.ஐ.டிக்குஅறிவிக்கப்பட்டதாகவும், தாம் அங்கு சென்ற போது, வாகனம் வெட்டப்பட்டதாகவும் தெரிவித்த சி.ஐ.டி அதிகாரி, குண்டு இருக்கிறதா எனப் பார்ப்பதற்கே வாகனத்தை வெட்டியதாக கடற்படையினர் தம்மிடம் தெரிவித்ததாகக் கூறினார்.  

தயானந்த நாணயக்கார என்ற அதிகாரி, திருகோணமலையில் பணியாற்றியபோது, லொறியொன்றில் குண்டு இருப்பதை அந்த லொறியை வெட்டியே கண்டுபிடித்ததாகவும் அந்தச் செயலுக்காக அவருக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டு வெலிசறை முகாமுக்கு மாற்றப்பட்டார் எனவும் சந்தேகநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, மன்றில் தெரிவித்தார்.  

வெலிசறையில் அவர் கடமையாற்றியபோதே, வான் இருக்கும் தகவல் கிடைத்து, வானில் குண்டு இருக்கிறதா என ஆராய வான் வெட்டப்பட்டதாகவும் கூறியதுடன், தனது சேவை பெறுருக்கு பிணை வழங்குமாறும் கோரினார்.   இது தொடர்பில் ஆராய்ந்த மேலதிக நீதவான், சந்தேகநபரின் விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .