2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கன்னியமர்வு கலைந்தது

Kogilavani   / 2017 ஜனவரி 06 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்   

அரசியலமைப்புச் சபையின் ஆறு உப-குழுக்களும், சமர்ப்பித்துள்ள அறிக்கைகள் மீதான விவாதத்துடன் 2017ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற கன்னியமர்வு ஆரம்பமாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அதற்கான சாத்தியக்கூறுகள் வெகுவாகக் குறைந்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.  

புத்தாண்டுக்கான நாடாளுமன்ற அமர்வு, எதிர்வரும் 9ஆம் திகதியன்று காலை 9:30க்கு சபாநாயகர் தலைமையில் ஆரம்பமாகவிருந்தது.

அன்றிலிருந்து, தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு, அதாவது எதிர்வரும் 11ஆம் திகதி வரையிலும் உப-குழுக்கள் சமர்ப்பித்துள்ள அறிக்கைகள் மீதான விவாதத்தை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்து.   

எனினும், சகல கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நியமிக்கப்பட்டுள்ள 21 உறுப்பினர்களைக் கொண்ட வழிநடத்தல் குழுவின் கூட்டம், காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டதை அடுத்தே, இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்று அறியமுடிகின்றது.   

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான பணியை முன்னெடுப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், இந்தக்கூட்டம் நேற்று வியாழக்கிழமை நடைபெற்று, அதன்தொடர்ச்சி, இன்று வெள்ளிக்கிழமையும் நடைபெறவிருந்தது.   
எனினும், உப-குழுக்களின் அறிக்கைகளை ஆராய்வதற்கு தங்களுக்கு இன்னும் நேர அவகாசம் தேவையென, அரசியல் கட்சிகள் சில தெரிவித்ததையடுத்தே, வழிநடத்தல் குழுவின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.  

உப-குழுக்களின் அறிக்கைகளை ஆராய்வதற்கு இரண்டுவாரகால அவகாசம் தேவைப்படுவதாக, கட்சிகள் சில கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.   

ஆகையால், ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த விவாதத்தை, இன்னும் இரண்டு வாரகாலத்துக்கு அரசாங்கம் ஒத்திவைத்துள்ளதாக அறியமுடிகின்றது. எனினும், உப-குழுக்களின் அறிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுமாயின், அரசாங்கம் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும் என்று, ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது.  

எவ்வாறெனினும், உப-குழுக்கள் மீதான விவாதமானது திட்டமிட்டப்படி நடத்தப்படவேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளதாக அறியமுடிகின்றது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .