2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

குன்றத்தூர் அபிராமி மேன்முறையீடு

Editorial   / 2025 ஓகஸ்ட் 12 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருமணத்தை மீறிய உறவு காரணமாக குழந்தைகளை கொலை செய்த வழக்கில் விதிக்கப்பட்ட சாகும் வரை சிறை என்ற தண்டனையை ரத்து செய்யக்கோரி அபிராமி தாக்கல் செய்த மேல்முறையீடு மனு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம் கட்டளைப் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (30). இவர் தனியார் வங்கியில் பணி செய்து வருகிறார். இவர், அபிராமி (25) என்ற மனைவி, அஜய் (7) என்ற மகன், கார்னிகா (4) என்ற மகளுடன் வசித்து வந்தார்.

டிக்டாக்கில் பிரபலமாக இருந்த அபிராமிக்கும், அருகில் உள்ள பிரியாணி கடை ஒன்றில் பணி செய்து வந்த மீனாட்சி சுந்தரத்துக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் முறை தவறிய உறவாக மாறியது. இருவரின் விவாகரம் வெளியில் தெரியவர, அவர்களை வீட்டில் கண்டித்தனர்.

இதனைத் தொடர்ந்து அபிராமியின் கணவரையும், இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு வீட்டை விட்டு வெளியேற அபிராமியும், மீனாட்சி சுந்தரமும் கடந்த 2018-ம் ஆண்டு முடிவு செய்தனர். இவர்கள் வீட்டை விட்டு வெளியேறியதால் மூவரும் தற்கொலை செய்து கொண்டனர் என்பதுபோல் காட்டுவதற்கான விஜய் மற்றும் குழந்தைகள் அஜய், கார்ணிகா ஆகியோருக்கு உணவில் தூக்க மாத்திரகளை அதிகமாக கலந்து அபிராமி கொடுத்துள்ளார்.

இதில் குழந்தை கார்ணிகா மட்டுமே இறந்தார். மறுநாள் காலையில் விஜய் வேலைக்குச் சென்றுவிட்டார். மயக்க நிலையில் இருந்து குழந்தை அஜய்யை கழுத்தை நெறித்து கொன்றார்.

இதனைத் தொடர்ந்து மீனாட்சி சுந்தரம், அபிராமி இருவரும் கோயம்பேடு சென்று தென்மாவட்டத்தை நோக்கி பயணித்தனர். வீட்டுக்கு வந்த விஜய், குழந்தைகள் இருவரும் இறந்து கிடப்பதை பார்த்து குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரைத் தொடர்ந்து விசாரித்த போலீஸார், இவர்கள் இறந்த்தற்கும், அபிராமிக்கும் தொடர்பு இருப்பது தெரிந்து, அவரது செல்போன் சிக்னல் மூலம் பிடித்து விசாரித்தனர். அப்போது, இந்தக் கொலை சம்பவத்தில் மீனாட்சி சுந்தரத்துக்கும் தொடர்பு இருப்பது தெரிந்த்து. இதனைத் தொடர்ந்து இருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கு காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ப.உ.செம்மல். குற்றம்சாட்டப்பட்ட அபிராமி, மீனாட்சி சுந்தரம் இருவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக்கோரியும், தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரியும் அபிராமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள், எம்.எஸ்.ரமேஷ், மற்றும் வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .