நாட்டின் எரிசக்தித் துறையில் உருவாகியுள்ள பாரிய நெருக்கடி பேரழிவில் முடிவதற்கு முன்னர், அதனைக் கையாள்வதற்கான முறையான திட்டத்தை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். மத்திய கிழக்கு போரை ஒரு காரணமாகக் காட்டி, நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினைகளிலிருந்து அரசாங்கம் தப்பித்துக்கொள்ள முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு, வாலுக்கராம விகாரையில் வியாழக்கிழமை (26) இடம்பெற்ற புண்ணிய நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிட்ட முக்கிய விடயங்கள் வருமாறு:
"எரிசக்தி நெருக்கடிக்கு லக்விஜய நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் போதிய மின் உற்பத்தி இல்லாமையே பிரதான காரணமாகும். தரம் குறைந்த நிலக்கரியைப் பயன்படுத்துவதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினமும் 168 மெகாவாட் மின்சாரம் குறைவாகவே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய டீசல் மின் நிலையங்கள் பயன்படுத்தப்படுவதால், உற்பத்திச் செலவு அதிகரித்து மின்சாரக் கட்டணம் உயர்கிறது. இது மக்கள் மீது மேலதிக சுமையை ஏற்றுவதுடன், எரிபொருள் தட்டுப்பாட்டிற்கும் வழிவகுக்கிறது."
"மத்திய கிழக்கு போரால் எழக்கூடிய சவால்களை முன்கூட்டியே கணித்து, அதற்கேற்ப திட்டமிடும் திறன் இந்த அரசாங்கத்திடம் இல்லை. போரினால் பாதிப்புகள் ஏற்படும் எனத் தெரிந்தும், முன்னாயத்த ஏற்பாடுகளை அரசாங்கம் செய்யவில்லை. தற்போது இந்த எரிசக்தி பாதுகாப்பின்மை நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளது. தரம் குறைந்த நிலக்கரிப் பிரச்சினைக்கு அரசாங்கம் இன்னும் முறையான தீர்வை வழங்கவில்லை."
"எரிபொருள் கையிருப்பு குறித்து அரசாங்கத்திடம் தெளிவான தரவுகள் இல்லை. மத்திய கிழக்கு போரை ஒரு கேடயமாகப் பயன்படுத்தி, நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்ற முறைகேடுகளை மூடி மறைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. உண்மைகளைப் புரிந்துகொள்ளாமல் நாட்டையும் மக்களையும் அரசாங்கம் கனவுலகிற்கு அழைத்துச் செல்கிறது. பாராளுமன்றத்தில் இது குறித்து விவாதிப்பதற்கான நாட்களையும் அரசாங்கம் திட்டமிட்டுக் குறைத்துள்ளது."
"தொடர்ச்சியான மின்சாரத்தை வழங்க முடியாவிட்டால் நாட்டின் பொருளாதாரம் பெரும் ஆபத்தைச் சந்திக்கும். மின்சாரம் மற்றும் எரிசக்தி சீராகக் கிடைக்காத பட்சத்தில், வெளிநாட்டு முதலீடுகள் நாட்டை விட்டு வெளியேறும். இதனால் வருவாய் குறைவு, வாழ்வாதார இழப்பு மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற சமூகப் பிரச்சினைகள் உருவாகும். அனைத்துத் துறைகளும் வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளது."
"அரசாங்கம் இப்போதாவது ரஷ்யா மற்றும் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி எரிபொருட்களைப் பெற்றுக்கொள்ள முன்வர வேண்டும். தரம் குறைந்த நிலக்கரிக்கு பதிலாகத் தரமான நிலக்கரியைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர்கள் மின்சாரச் சிக்கனம் குறித்து மக்களுக்கு உபதேசம் செய்வதற்கு முன்னர், நிலக்கரிப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்."
"மத்திய கிழக்கில் சுமார் 10 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் பணிபுரிகின்றனர். அவர்கள் கடந்த ஆண்டு 8 பில்லியன் டொலருக்கும் அதிகமான அந்நியச் செலாவணியை ஈட்டித் தந்துள்ளனர். போர் காரணமாக அவர்கள் நாடு திரும்ப நேரிட்டால், அவர்களுக்கான இழப்பீடு அல்லது மறுவாழ்வுத் திட்டங்கள் அரசாங்கத்திடம் இல்லை. நாம் யோசனைகளை முன்வைக்கும் போது, எம்மீது சேறு பூசும் நடவடிக்கைகளையே அரசாங்கம் செய்கிறது."
எனவே, இனியாவது அரசாங்கம் முறையான தரவுகளின் அடிப்படையில், மூலோபாய ரீதியான தீர்வுகளை முன்னெடுத்து நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் வலியுறுத்தினார்.