S.Renuka / 2026 ஏப்ரல் 01 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 9 பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்து, அவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ள சம்பவம் ஒன்று பிஹாரில் இடம்பெற்றுள்ளது.

பிஹார் மாநிலம் நாளந்தா மாவட்டம், மேக்ரா கிராமத்தில் அமைந்துள்ள ஷிதாலா தேவி கோயிலில், ஷிதாலா அஷ்டமியை ஒட்டி இந்த செவ்வாய்க்கிழமை (31) அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். அப்போது, பக்தர்கள் முண்டியடித்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து முதல்வர் நிதிஷ் குமார் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், ஷிதாலா தேவி கோயில் கூட்ட நெரிசலில் பக்தர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ரூ.4 லட்சம், முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 இலட்சம் என மொத்தம் ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், “நாளந்தா மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்து மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார். பிஹார் பொலிஸ் தலைவர் (டிஜிபி) வினய் குமார், கூட்ட நெரிசல் ஏற்பட்ட கோயிலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, "அம்மனை வழிபட 25,000 பேர் வரிசையில் காத்திருந்து உள்ளனர். கோயிலின் கருவறை பகுதிக்கு செல்லும் படிக்கட்டுகள் சரியாக இல்லை. கூட்டம் முண்டியடித்தபோது பக்தர்கள் வழுக்கி விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன. உள்ளூர் போலீஸ் நிலையத்தின் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். விபத்து குறித்து உயர்நிலை விசாரணை நடத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
நாளந்தா மாவட்ட எஸ்.பி.பாரத் சோனி கூறும்போது, “கோயில் கூட்ட நெரிசல் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு உள்ளது. சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து கூட்ட நெரிசல் எவ்வாறு ஏற்பட்டது என்பதை கண்டறிவோம். தவறிழைத்த அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
விபத்தில் காயமடைந்த பங்கஜ் குமார் கூறும்போது, “அம்மனை வழிபட நான் 3 மணி நேரம் வரிசையில் காத்திருந்தேன். கோயில் அருகே செல்லும் போது காலை 9 மணி அளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். முதிர்வயது பெண்கள் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். என் மீது சுமார் 20 பேர் விழுந்தனர். இளம்வயது என்பதால் நான் காயங்களுடன் உயிர் தப்பினேன்" என்றார்.
17 minute ago
21 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
21 minute ago
50 minute ago