2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

காணியை விரைவில் விடுவிக்க நடவடிக்கை

Freelancer   / 2024 ஜனவரி 08 , மு.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன் 

சுமார் 28 வருடங்களின் பின்னர் பாதுகாப்பு படையினரிடமிருந்து விடுவிக்கப்பட்ட யாழ்.மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயத்திற்கான புதிய கட்டடம் ஒன்றை நிர்மாணிக்க இலங்கை விமானப்படை முன்வந்துள்ளது.

அதற்கமைய குறித்த பிரதான மண்டபக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. 

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கை விமானப்படையின் வான்வெளிப் பொறியியல் துறையின் பணிப்பாளர் நாயகம் ஏயார் வைஸ் மார்சல் முதித்த மஹவத்தகே, திட்ட இணைப்பாளர் குரூப் கப்டன் துஷார பண்டார, இலங்கை விமானப் படையின் பலாலி படைத்தளத்தின் கட்டளை அதிகாரி குரூப் கப்டன் சமிந்த ஹேரத் , இலங்கை விமான படையின் அதிகாரிகள், வடக்கு மாகாண பிரதம செயலாளர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், கல்வி துறைசார் அதிகாரிகள் , மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.

சுமார் எட்டு மில்லியன் ரூபாய்  செலவில் இலங்கை விமானப் படையினரால் பாடசாலைக்கான புதிய கட்டடம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

 விமானப் படையின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளின் அங்குரார்ப்பண நிகழ்வாக இன்றைய அடிக்கல் நாட்டும் நிகழ்வு அமைந்துள்ளது. அத்துடன் பாடசாலை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டதுடன், நூலகத்திற்கான புத்தகங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

205 வருடகால வரலாற்றை கொண்ட யாழ்.மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயத்திற்கு சொந்தமான 2.5 பர்சஸ் காணி இதுவரை விடுவிக்கப்படாமல் உள்ளதாகவும், விளையாட்டு மைதானம் புனரமைக்கப்படவில்லை எனவும் பாடசாலையின் அதிபர் இதன்போது கூறினார். 

  ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மிக விரைவில் அதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் இதன்போது வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார். ஏனைய உட்கட்டமைப்பு பிரச்சினைகள் தொடர்பில் எழுத்துமூலம் கோரிக்கைகளை சமர்பிக்குமாரும், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார். 

1818 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நான்காம் திகதி ஸ்தாபிக்கப்பட்ட யாழ்.மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயம், அசாதாரண நிலைமையின் காரணமாக, 1990 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16  ஆம் திகதி பாதுகாப்பு படையினர் கைபற்றினர். சுமார் 28 வருடங்களின் பின்னர் 2018 ஆம் ஆண்டு 09 மாதம் 06 ஆம் திகதி இந்த பாடசாலை மீண்டும் பொதுமக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X