Editorial / 2026 மார்ச் 18 , பி.ப. 01:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

விஜயரத்தினம் சரவணன்
முல்லைத்தீவு - கேப்பாபிலவு பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் விடுத்த கோரிக்கையையடுத்து, இது குறித்த விரிவான அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி செயலகம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜனவரி 07ஆம் திகதி பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சு சார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில், கேப்பாபிலவு காணிகள் அனைத்தும் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும், எஞ்சியவர்களுக்குப் பதிலீட்டு நிலம் மற்றும் வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ அதிகாரிகளால் ஜனாதிபதிக்குத் தகவல் வழங்கப்பட்டது.
இதற்கு உடனடி எதிர்ப்புத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், இராணுவத்தினரால் வழங்கப்பட்டது தவறான தகவல் என்பதையும், இன்னும் 59 பேருக்குச் சொந்தமான 159.5 ஏக்கர் காணிகள் இராணுவத்தின் வசமுள்ளதையும் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினார்.
இதனைத் தொடர்ந்து, முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திடமிருந்து பெற்றுக்கொண்ட அதிகாரபூர்வமான காணி விபரங்களை உள்ளடக்கி, கடந்த 14.01.2026 அன்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கு ரவிகரன் எம்.பி கடிதமொன்றை அனுப்பி வைத்தார்.
”16 ஆண்டுகளாகத் தமது சொந்த நிலத்திற்காகக் காத்திருக்கும் கேப்பாபிலவு மக்களை கௌரவத்துடன் மீள்குடியேற்ற விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு” அக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
பாராளுமன்ற உறுப்பினரின் இக் கடிதத்தை மேற்கோள் காட்டி, ஜனாதிபதி செயலகம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் (இலக்கம்: PS/DA/SAD/06/41-Vol.01) பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
"முல்லைத்தீவு கேப்பாபிலவு பிரதேசத்தில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் காணிகளை விடுவிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார். பெருமளவிலான காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, பாதுகாப்புப் பிரிவினரிடம் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு, கேப்பாபிலவு காணி விடுவிப்பு தொடர்பான விரிவான அறிக்கையொன்றை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்."
இக் கடிதத்தின் பிரதி மேலதிக தகவலுக்காக பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரனுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீண்டகாலமாக இழுபறியிலுள்ள கேப்பாபிலவு காணி விடுவிப்பு விவகாரத்தில் தற்போது முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
33 minute ago
51 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
51 minute ago
1 hours ago
1 hours ago