2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

“சோமரட்ன ராஜபக்‌ஷக்கு அரசாங்கம் வழி கொடுக்க வேண்டும்“

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 05 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலே நிலத்திற்கு கீழே தான்உண்மைகள் பலவும் புதைக்கப்பட்டு இருக்கின்றன எனசுட்டிக்காட்டியுள்ள  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் சர்வதேச நீதிமன்றில் சாட்சியமளிக்க தான் தயார் என சோமரத்ன ராஜபக்ச சொல்லியிருந்தால் அதற்கு அரசாங்கம் வழி செய்து கொடுக்க வேண்டும் என்றார்.

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு இடம் பெறுவதை நேரில் சென்று  பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும்தெரிவிக்கையில்..

செம்மணி மனிதபுதைகுழி ஆய்வு நடைபெறுகிற இடத்திலே ஸ்கேனர் கருவி இன்றைக்கு பாவிக்கப்பட்டிருக்கிறது. அதை பாவிப்பதன் மூலம் நிலத்திற்கு அடியில் ஏதாவது அசாதாரணமான விடயங்கள் காணப்பட்டால் அல்லது அசைவுகள் இருந்தால் இந்த இயந்திரம் அதை வெளிக்கொண்டு வரும் எனச் சொல்கிறார்கள்.

இதற்கமைய இன்றைய பரிசோதனையில் தரவுகள் பெறப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். அந்த தரவுகளை ஆராய்ந்து அது எப்படியாக இருக்குமென்று அனுமானங்கள் செய்து இங்கு வேறு எந்த இடத்திலே மனித எலும்புக் கூடுகள் இருப்பதற்கான சாத்தியங்கள் இருக்கிறது என்பதை அறிந்து அந்தந்த இடங்களில் அகழ்வுகள் செய்வார்கள். 

பொலிஸாரின் குற்றப் புலனாய்வுத் துறையின் மூலமாக பொதுமக்களுக்கு ஒரு அறிவித்தலும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது இங்கே கண்டெடுக்கப்பட்ட தடயப்பொருட்கள் அவர்கள் வந்து பார்வையிடலாம். அவ்வாறு பார்வையிடுகிற போது அதில் ஏதாவது தங்களுக்கு தெரிந்தது அதாவது தங்களுடைய உறவினர்கள் யாரும் வைத்திருந்ததா எனஅடையாளம் காணமுடியுமா என்று பொலிஸ் குற்ற விசாரணைப் பிரிவுதங்களுக்கு வேறான ஒரு விசாரணையை நடாத்துகிறார்கள். 

இந்த மனித புதைகுழியில்  இப்பொழுது 130 இற்கும் மேற்பட்ட எலும்புத் தொகுதிகளாக கண்டெடுக்கப்பட்ட இருக்கின்றன. இவ்வாறு ஒவ்வொரு நாளும் இங்கு எலும்புக் கூடுகள் கண்டு எடுக்கப்படுகின்றன. 

இதனுடைய பின்னணியை நாங்கள் பார்ப்போமாக இருந்தால் 1999 ஆம் ஆண்டு சோமரத்ன ராஜபக்ச நீதிமன்றத்தில் சொன்ன கூற்றின் பிரகாரம் 15 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

அதைத்தொடர்ந்து இப்பதற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட எலும்பு கூட்டினால் தொடரும் அகழ்வு பணியில் நூற்றுகணக்கான எலும்பு கூட்டுதொகுதிகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு இப்போது கண்டெடுக்கப்படுகின்றவை அந்த வேளையில் சோமரத்ன ராஜபக்ச சொன்னகருத்துக்களுடன் ஒத்துப் போகிறது.  அவர் 300 தொடக்கம் 400 வரையிலான உடல்கள் புதைக்கப்பட்டது என்றும் அதில் இராணுவ மிக உயர் அதிகாரிகள் பங்காளர்களாக இருந்திருக்கிறார்கள் என்றும் நீதிமன்றத்தில் அப்போது சொன்ன விடயம் கால நூற்றாண்டுக்கு மேலாக அதாவது 25 வருடங்களுக்கு பின்னர் இப்ப அதனுடை ய உண்மைத்தன்மை வெளிப்படுகிறது.  நான் பல தடவைகள் முன்னரே சொல்லிஇருந்ததைப் போல உண்மை கண்டறியப்படுகிறது

பொறிமுறைமை குறித்து நாங்கள் பேசுகிற போது இலங்கையிலே நிலத்திற்கு கீழே தான் இந்த உண்மைகள் பல புதைக்கப்பட்டு இருக்கின்றன.  ஆகவே இந்த மனித புதைகுழிகள் தோண்டப்படுகிற விடயம் உண்மை கண்டறியப்படுகிறது.

செயன்முறையில் மிகவும் முக்கியமான ஒரு பங்களிப்பைச் செலுத்துகிறது.  பலருக்கு பல விதமான சந்தேகங்கள் இருக்கின்றன. இது மூடிமறைக்கப்படும் அல்லது அப்பொழுது செம்மணியிலே செய்து விட்டு கைவிட்டது போல அப்படியே இதுவும் கைவிடப்படுமா அல்லது மன்னாரில் அல்லது கொக்குத்தொடுவாய் அல்லது மாத்தறையில் நடந்ததை போல இருக்குமா என்று பல விதமான சந்தேகங்கள் கேள்விகள் பலருக்கு இருக்கிறது. 

ஆகையினால் தான் இதனைவெளிப்படைத் தன்மையோடு செய்ய வேண்டுமென்று நாங்கள் கேட்கிற அதே வேளையிலே இலங்கை அரசாங்கத்தினுடைய வெவ்வேறு அணிகள் அது பொலிஸாக இருக்கலாம் அல்லது காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகமாக இருக்கலாம் பல்கலைக் கழகமாக இருக்கலாம் அகழ்வு பணிகள் செய்பவர்களாக இருக்கலாம் இவர்கள் எல்லாம் இதனைச்சேர்ந்து செய்திருந்தாலும் கூட மக்களுக்கு இது சம்பந்தமாக ஒரு நம்பிக்கை ஏற்படுவதாக இருந்தால் நிச்சயமாக ஆரம்பத்தில் இருந்தே சர்வதேச மேற்பார்வை இருக்க வேண்டுமென நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டே இருக்கிறோம். 

இந்த அகழ்வு பணிகள்ஆரம்பித்த வேளையிலேயே நாங்கள் இது சம்பந்தமாக ஐனாதிபதிக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறோம். ஐனாதிபதிக்கு தான்அந்த கடிதத்தை எழுத முடியும். ஏனென்றால் இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே தான் இது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

ஆகையினாலே வெறுமனே இப்படியான நிபுணத்துவம் இல்லாத தரப்புக்களை வைத்து இதனைச்செய்யாமல் முழுமையாக ஒரு சர்வதேச ஈடுபாட்டை இந்த வேளையிலே வருவிக்க வேண்டும் என்பது நாங்கள் தொடர்ச்சியாக சொல்லி வருகிற ஒரு விடயம்.

ஆகவே அதனை திரும்பவும் இப்போதும் வலியுறுத்துகிறேன். அது மட்டுமல்ல செம்மணி என்று சொன்னாலே சோமரட்ன ராஜபக்ச நீதிமன்றத்தில் கூறியதில் இருந்து எழுந்த அந்த விடயம் இப்பொழுது நிரூபணமாகி கொண்டு இருக்கிறது.  நேற்றைய தினம் கூட செம்மணி தொடர்பில் சர்வதேச நீதிமன்றிலே சாட்சியமளிக்க தான தயார் என சொன்னதாக செய்திகள் வந்திருக்கிறது.

அந்தச் செய்தி உண்மையானால் அதற்கு வழி செய்து கொடுக்க வேண்டும்.  சர்வதேசமன்ற ஒன்றிலே அவரை நிறுத்தி அவருடைய கூற்றுக்களைப் பெற்று அவர் சொல்லுவதில் ஒத்துப் போகிறதான இந்தத்தடயங்களை கண்டுபிடிக்கிற விடயங்களை ஒத்துப் பார்க்கப்பட வேண்டும்.

இது மட்டுமல்ல. இது ஒரு திருப்பு முனையான சம்பவமாக நாங்கள் கருதுகிறோம்.  வேண்டுமென்றே தமிழ் மக்கள் ஒரு இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டதற்கு தற்கால சான்றுகள் இங்கே இருந்து ஆரம்பமாகிறது போலவும் தோன்றுகிறது. 

ஆகவே இதற்கான சான்றுகளை சேகரிக்கிற பொறிமுறைகள் விசேடமாக ஜக்கியநாடுகள் மனிதஉரிமைப் பேரவையிலே தற்பொழுது ஒஸ்லெப் என்ற பொறிமுறை இருக்கிறது.

அதாவது சான்றுபதிவு செய்வதும் பாதுகாப்பதுமான பொறிமுறை. அவை எல்லாம் வரவழைக்கப்பட்டு இங்கே நடந்த விடயங்கள் முழுமையாக வெளிப்படுத்தப்பட வேண்டும். 

அரச அதிகாரிகள் அல்லது அரச திணைக்களங்கள் இதிலே சற்று பின்னடிக்கிறதான சந்தேகங்கள் சில சில சம்பவங்கள் மூலமாக எங்களுக்கு தெரிய வருகிறது.  ஆகவே அரசாங்கத்திற்கு நாங்கள் சொல்வது இதிலே முழுமையான வெளிப்படைத் தன்மையோடு முழுமையான சர்வதேச மேற்பார்வையோடு இவைவெளிக்கொண்டு வரப்படவேண்டும்.

ஆகையினாலே திரும்பவும் ஒரு சர்வதேச பொறிமுறை இதற்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.  மேலும் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்திலே நிலுவையில் இருக்கும்  செம்மணி வழக்கை இங்கே இடம்மாற்ற வேண்டும்.

இங்கே இருந்த வழக்கை அப்பொழுது சந்தேக நபர்களாக இருந்த இராணுவத்தினர் இங்கே பாதுகாப்பு போதாதென்று கூறி அனுராதபுரத்திற்கு மாற்றிய பின்னர் கொழும்பிற்கு மாற்றப்பட்டு அங்கே வழக்கு இருக்கிறது. ஆகையினாலே  அந்த வழக்கை இங்கே திரும்பவும் கொண்டு வரப்பட்டு இந்த வழக்கோடு சேர்ந்து விசாரிக்கப்பட  வேண்டும் என்றார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X