2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தாக்குதலின் பின்னணியில் ‘பாதாள உலக கோஷ்டி’

Gavitha   / 2017 ஜனவரி 09 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிரோஷினி

ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தியோர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் பாதாள உலகக் கோஷ்டியினர் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்தது. 

பத்தரமுல்லையில் உள்ள பெரமுனவின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே, பெரமுனவின் ஊடகப்பேச்சாளர் சஞ்சீவ எதிரமான மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், கொழும்பிலிருந்து மக்களை கொண்டுச்சென்று ஹம்பாந்தோட்டையில் போராட்டம் நடத்தப்படவில்லை. அந்தப் போராட்டம் அப்பிரதேசத்தைச் சேர்ந்த மக்களால் முன்னெடுக்கப்பட்டது.  

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொண்டதன் பின்னர், ​ஆர்ப்பாட்டக்காரர்கள் தத்தமது வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.  

அதன் பிறகு, பொலிஸாரும் இன்னும் இனந்தெரியாத சில நபர்களும் அவர்களது வீடுகளுக்கு பலவந்தமாக புகுந்து பெண்கள், சிறுவர்கள் என பார்க்காமல் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

தமது நிலத்தை வௌிநாட்டுக்கு தாரைவார்த்துக்கொடுக்கக்கூடாது என ஆர்ப்பாட்டம் நடத்திய மக்களுக்கு இன்று தத்தமது வீடுகளில் நிம்மதியாக இருக்கமுடியாத சூழ்நிலையை இந்த அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பிரயோகிக்கப்பட்ட கண்ணீர் புகையிலும் எரிச்சல் தன்மை அதிகரிக்கக் கூடிய திரவமொன்றும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றார். 

மேலும், ஆர்ப்பாட்டத்தின்போது, கறுப்பு ஆடையில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடியவர்கள் மீது எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நல்லாட்சி அரசாங்கம் ஹம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த கொழும்பில் புளுமெண்டல், மருதானை மற்றும் கொலன்னாவ பகுதிகளிலுள்ள அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் வழிகாட்டலின் கீழ் செயற்படும் பாதாள உலகக் கோஷ்டியினரை ஹம்பாந்தோட்டைக்கு அனுப்பிவைத்துள்ளது. அவ்வாறு அனுப்பப்பட்டவர்களில் ஒருவராக அந்நபர்கள் இருக்கலாம் எனும் சந்தேகம் தற்போது எழுந்துள்ளது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .