2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

தாஜுதீன் மரணம்: உடற்பாகங்கள் லொறியில் கொண்டு செல்லப்பட்டன

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 06 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் உடற்பாகங்கள் மாயமாகியுள்ளமையானது, பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றமாகும் என, சட்டமா அதிபரினால், கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் நேற்றுத் திங்கட்கிழமை (05) தெரிவிக்கப்பட்டது.

மேற்படி உடற்பாகங்கள், குளிரூட்டியிலிருந்து அகற்றப்பட்ட பின்னர், லொறியொன்றின் மூலமே
எடுத்துச் செல்லப்பட்டமைக்கான சாட்சியங்கள் இருப்பதாகவும், சட்டமா அதிபரினால், நேற்றுத் தெரிவிக்கப்பட்டது.

தாஜுதீனின் உடற்பாகங்கள், கொழும்பு முன்னாள் சட்டவைத்திய அதிகாரி டாக்டர் ஆனந்த சமரசேகரவின் பொறுப்பில் இருந்த போதே இவ்வாறு மாயமாகியுள்ளன என்றும் சட்டமா அதிபரினால், நீதவான் முன்னிலையில் சுட்டிக்காட்டப்பட்டது.

சட்ட வைத்திய அதிகாரி என்பது, அரசாங்க உத்தியோகஸ்தராவார். அதனால், அவரது பொறுப்பிலிருந்த உடற்பாகங்கள், பொதுச் சொத்துக்களாகவே கருதப்படும் என்றும், சட்டமா அதிபர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், டொக்டர் ஆனந்த சமரசேகர சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி, உடற்பாகங்கள் மாயமாகியதை, பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றமாக்குவது, விநோதமானது என வலியுறுத்தியதுடன், தனது கட்சிக்காரருக்கு முன்பிணை வழங்குமாறு, மனுவொன்றையும் தாக்கல் செய்தார்.

ஆனந்த சமரசேகரவை, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தால், அவரை பிணையில் விடுவிக்குமாறு வலியுறுத்தியே, மேற்படி முன்பிணைக்கான மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

எவ்வாறாயினும், இது தொடர்பான தீர்மானத்தை, எதிர்வரும் 9ஆம் திகதியே வழங்குவதாக, கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் அறிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X