2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

துமிந்த சில்வாவை ‘மூளைக் கோளாறு நிபுணரிடம் காண்பிக்கவும்’

Kogilavani   / 2017 ஜனவரி 27 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா திபான்

மூன்று வழக்குகளின் சந்தேகநபரான முன்னாள் எம்.பி துமிந்த சில்வாவை, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மூளைக் கோளாறு, நரம்பு சம்பந்தமான விசேட வைத்திய நிபுணரிடம் காண்பித்து, அதன் அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல, கட்டளையிட்டார்.

சொத்துகள் மற்றும் கடன்களை வெளிப்படுத்தாமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் எம்.பி துமிந்தவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த மூன்று வழக்குகள், விசாரணைக்கு நேற்று எடுத்துகொள்ளப்பட்டன.   

இந்நிலையில், துமிந்த சில்வாவின் நோய் தொடர்பிலான அறிக்கையை, சிறைச்சாலைகள் அதிகாரிகள், நீதிமன்றத்தில் கையளித்தனர். இதன்போதே மேலதிக நீதவான், மேற்கண்டவாறு கட்டளையிட்டார். அத்துடன் வழக்குகளை, பெப்ரவரி மாதம் 13ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.  

2010, 2011, 2013ஆகிய மூன்று ஆண்டுகளுக்கான சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான ஆவணங்களைக் கையளிக்காதன் காரணமாக, இலஞ்ச மற்றும் ஊழல் தொடர்பான சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால், அவருக்கு எதிராக மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.  

அந்த வழக்குகள், கடந்த 5ஆம் திகதியன்று எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அம்பியூலன்ஸ் மூலமாக நீதிமன்ற வளாகத்துக்குக் கொண்டுவரப்பட்டிருந்த அவர், நீதிமன்ற அறைக்குக் கொண்டுவரப்பட்டு, நீதவானுக்கு முன்னால் ஆஜர்படுத்தப்படவில்லை.  

அவரின் உடல்நலம் குறித்த மருத்துவ அறிக்கையை, இரண்டு வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு, அன்றையதினம் உத்தரவிடப்பட்டிருந்தது.  

அது தொடர்பில், வெலிக்கடைச் சிறைச்சாலை வைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.  
சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் வைத்தியசாலையின் மருத்துவ அறிக்கைக்கு அமைய அவருக்கு சிகிச்சையளிக்கப்படுவதாகவும் அதற்கமைய, கடந்த 5ஆம் திகதியன்று அவரை சக்கரக் கதிரையில் நீதிமன்றுக்கு அழைத்துவர இருந்ததாகவும் 4ஆம் திகதி அவருக்கு சுகவீனம் ஏற்பட்டதால், அவரை அம்பியூலன்ஸில் கொண்டுவந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டிருந்தது.  

அறிக்கையைப் பரிசீலித்த பின்பே, மேலதிக நீதவான், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மூளைக் கோளாறு நரம்பு சம்பந்தமான விசேட வைத்திய நிபுணரிடம் காண்பித்து அறிக்கையிடுமாறு பணித்தே, வழக்கை ஒத்திவைத்தார்.  

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் தொழிற்சங்க ஆலோசகரும் முன்னாள் எம்.பியுமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் படுகொலை வழக்கில், துமிந்தவுக்கு மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .