2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

’த.மு.கூட்டணியை விமர்சிக்க இ.தொ.காவுக்கு அருகதை இல்லை’

Editorial   / 2019 பெப்ரவரி 01 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வெறும் 20 ரூபாய் சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுத்துவிட்டு, ஏதோ உலக சாதனை நிகழ்த்திவிட்டது போல் வீராப்பு பேசும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என மார்தட்டிக் கொள்வது, வங்குரோத்து  அரசியலின் உச்சகட்டமாகும் என்று, ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட எம்.பியுமான வேலுகுமார் தெரிவித்தார்.

சலுகைகளுக்கும் எலும்புத் துண்டுகளுக்கும் விலை போகாமல்,  மக்களின் உரிமைகளை முன்னிலைப்படுத்தி, கொள்கை அரசியலை  முன்னெடுத்துவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியை விமர்சிப்பதற்கு  இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு எவ்வித அருகதையும் கிடையாதென்றும் அவர்  கூறினார்.

கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் மேலும் கூறியதாவது,

“மலையக மக்களுக்கான அபிவிருத்தி மற்றும் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதே எமது இலக்காகும்.  இதன் படி மலையக அபிவிருத்தி அதிகாரசபையை  நிறுவியுள்ளோம். தோட்டப்புறங்களின்  அபிவிருத்திக்கு தடையாக இருந்த பிரதேச சபை சட்டத்தை மாற்றியமைத்துள்ளோம். இருந்தாலும், அதை செய்துவிட்டோம், இதை செய்யப்போகின்றோம் என ஒருபோதும் நாம் மார்தட்டியதில்லை.

'எனினும், சரணாகதி அரசியலை நடத்துபவர்கள், புதுமணத் தம்பதிக்கு அருந்ததி காட்டப்படுவது போல், “தாத்தா அதை செய்தார், இதைச் செய்தார்” என அந்தக் காலத்துக் கதையைக் கூறியே அரசியல் நடத்தி வருகின்றனர்.  உருப்படியாக எதையும் செய்ததாகத் தெரியவில்லை.  கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவன், வானமேறி வைகுண்டம் போன கதைபோல் தான் சேவல் கட்சிக்காரர்களின் செயற்பாடுகள் இருக்கின்றன.

“மலையக மக்களுக்கென தனித்துவமானதொரு கூட்டணியை அமைத்து, இதுவரை காலம் தமிழ்ப் பிரதிநிதித்துவம் இல்லாத மாவட்டங்களிலும், தொகுதிகளிலும் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை வென்றெடுத்துள்ளோம். உரிமை அரசியலுக்காக போராடி வருகின்றோம்.

“ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணக்கப்பாட்டு ரீதியில் அரசியல் நடத்திவரும் நாம், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சரணாகதி அரசியலை நடத்தவில்லை என்பதை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் புரிந்துகொள்ள வேண்டும். சூழ்ச்சி மூலமாவது பதவியைப் பெறவேண்டுமென, கீழ்மட்ட அரசியல் சிந்தனையும் எம்மிடம் இல்லை” என, அவர் மேலும் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .