2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

திருகோணமலைக்கும் இஸ்ரேலியர்களா?

Freelancer   / 2026 ஜனவரி 23 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா பிரதேச செயலகப்பிரிவு காணிகளை  சுற்றுலா துறைக்கு எடுத்துக்கொண்டுள்ளதன் மூலம்  அருகம்பையில்  இஸ்ரேலியர்களின் ஆதிக்கம் இருப்பதுபோன்று  திருகோணமலைக்கும் இஸ்ரேலியர்களை  கொண்டுவருவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட எம்.பி. இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) அன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா  நேரத்தில் இடையீட்டு வினா ஒன்றை எழுப்பியே  இவ்வாறு தெரிவித்த  அவர் மேலும் கூறுகையில்,

கிண்ணியா பிரதேச செயலகப்பிரிவில் பல்கலைக்கழக கல்லூரி ஒன்றை நிறுவுவதற்காக  காணி சீர் திருத்த ஆணைக்குழுவினால் 13ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டு, 2018ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தில் 50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடம் தற்போது கைவிடப்பட்ட நிலையில் உள்ளது .

தற்போது திடீரென இந்த காணியை சுற்றுலா துறைக்கு எடுத்துக்கொண்டதால் , மக்கள் மத்தியில் ஒரு அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் கடந்த டிசம்பர் மாதம் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த பிரதி அமைச்சர் ஒருவர் இஸ்ரேலுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அதன் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால்  அருகம்பையில் எவ்வாறு இஸ்ரேலியர்களின் ஆக்கிரமிப்பு  இருக்கின்றதோ, அதேபோன்ற  திருகோணமலை சுற்றுலா பிரதேசத்தை அபிவிருத்தி செய்து, இஸ்ரேலியர்களின் ஆதிக்கத்தை  திருகோணமலையிலும்  பதிக்க வேண்டும் என்பதற்காக செய்கின்ற ஒரு நடவடிக்கையா என்ற சந்தேகம் எமது மக்கள் மத்தியில்எழுந்துள்ளது

நாங்கள் அரசியல் செய்வதாக இருந்தால், இதனை வைத்துக்கொண்டு அரசியல் செய்திருக்கலாம். ஆனால் நாம் அவ்வாறு செய்யவில்லை.  திருகோணமலை மாவட்டத்தில் மாணவர்கள் மிகவும் கஷ்ட நிலையில் இருக்கிறார்கள்.  அதனால் பல்கலைக்கழக கல்லூரி கட்டிடத்தை தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபையின் பயிற்சிகளை முன்னெடுக்க பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால்  தற்போது இந்த பிரதேசத்தில் யானைகளின் அச்சுறுத்தல்  இருப்பதால், தொழிற் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த பிரதேசம் பொருத்தம் இல்லை எனத்  தெரிவிக்கின்றனர். திருகோணமலை மாவட்டத்தை பாெறுத்தவறை 80 வீதமான பிரதேசங்கள் யானை அச்சுறுத்தல் இருக்கும் இடங்களாகும். அதற்கான ஒரு தீர்வை வழங்க வேண்டும் என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X