2026 மே 13, புதன்கிழமை

தர்பூசனிக்கு பலியான மற்றுமொரு சிறுவன்

Lenin Raj   / 2026 மே 13 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


மஹாராஷ்டிராவின் மும்பையில் தர்பூசணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலியான சில நாட்களில், சத்தீஸ்கரிலும் தர்பூசணி சாப்பிட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கரின் ஜான்ஜ் கிர் - சம்பா மாவட்டத்தில் உள்ள குர்கோட் கிராமத்தில் நடந்த திருமணத்தில் பங்கேற்ற போடி தால்ஹா கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் அகிலேஷ் திவார், அங்கிருந்து மாமா வீட்டிற்குச் சென்றார். கடந்த 10-ஆம் திகதி மாலை மாமா வீட்டில் தங்கியிருந்த அகிலேஷ் மற்றும் அந்த கிராமத்தைச் சேர்ந்த சில சிறுவர்கள், அங்கு பல துண்டுகளாக வெட்டி வைக்கப்பட்டிருந்த தர்பூசணியைச் சாப்பிட்டுள்ளனர்.

சற்று நேரத்தில் அவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதோடு மூச்சுத்திணறலும் ஏற்பட்டுள்ளது. மறுநாள், பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியிலேயே அகிலேஷ் உயிரிழந்தார். ஏனைய சிறுவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெட்டி வைக்கப்பட்டிருந்த தர்பூசணியைப் பல மணி நேரத்திற்குப் பின் சாப்பிட்டதால் உணவு நஞ்சாகியிருக்கலாம் (Food Poisoning) என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். இதையடுத்துச் சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தடயவியல் பரிசோதனைக்காகச் சிறுவனின் உள் உறுப்புகளும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மேலும், வீட்டில் இருந்த மற்றொரு தர்பூசணியை ஆய்வுக்கூடப் பரிசோதனைக்காக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

மும்பையின் பைதோனி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தர்பூசணி சாப்பிட்டுப் பலியாகினர். இந்த நிலையில் சத்தீஸ்கரில் நிகழ்ந்த இச்சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .