2026 மே 14, வியாழக்கிழமை

தாழமுக்கம் இன்று புயலாக மாறும்

Niroshini   / 2021 மே 24 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் நிலைகொண்டிருக்கும் தாழமுக்கம், இன்றைய தினம் (24) புயலாக மாற்றமடையக்கூடுமென, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக, எதிர்வரும் சில தினங்களுக்கு வடக்கு அந்தமான் கடல் பிரதேசம் மற்றும் வடமேற்கு வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில், கடல் திடீரென கொந்தளிப்புடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமென்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக, வங்காள விரிகுடாவின் கிழக்கு, மத்திய பகுதியிலும் அதனையடுத்து நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசத்திலும், நேற்று (23) முதல் மறு அறிவித்தல் வரை, மீன்பிடி மற்றும் கடல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், மேல், சப்ரகமுவா, மத்தி மற்றும் தென் மாகாணங்களில், நாளை முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு, 150 மில்லிமீற்றருக்கும் அதிகளவில் மழை பெய்யக்கூடுமெனவும் திணைக்களம் எதிர்வுகூரியுள்ளது.

இதனால், அனர்த்த நிலைமைகள் ஏற்படும்போது, அவற்றை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, உரிய தரப்பினரை அறிவுறுத்தியுள்ளார்.

இந்த வானிலை மாற்றத்தால், நாட்டின் 12 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்படக்கூடும் என்று எதிர்வு கூரப்பட்டுள்ள நிலையில், அப்பிரதேச மக்களுக்குத் தேவையான நிவாரண வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவும், திணைக்களம் தயாராக இருக்கின்றதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான நிதி மற்றும் நிவாரண உதவிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களும் இந்த அனர்த்தங்களை எதிர்கொள்ள நேரிட்டால், சுகாதாரத் தரப்பினருடன் இணைந்து, அவர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் தயாராக உள்ளதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அனர்த்த நிலைமைகளுக்கு முகங்கொடுக்கும் மக்கள், 117 என்ற அவசர அழைப்பு இலக்கத்துடன் தொடர்பை மேற்கொண்டு அறிவிக்குமாறும் கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, குருநாகல், மத்திய மலைநாட்டைச் சேர்ந்த மக்கள், மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டுமென்றும், அவர் வலியுறுத்தியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .