2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

நீர் தேடி விலங்கு வரும் கவனம்

Gavitha   / 2016 ஒக்டோபர் 03 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

யொஹான் பெரேரா

வரட்சியால் பாதிக்கப்பட்ட விலங்குகள், நீரைத்தேடி நீருள்ள இடங்களுக்கு வரக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படும் என்றும் இதனால், அந்த விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்க வேண்டாம் என்றும் மக்களும் விழிப்புடன் செயற்படுமாறும், நிலையான அபிவிருத்தி மற்றும் வனவிலங்கு அமைச்சு நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) தெரிவித்தது. 

நாட்டின் பல்வேறு இடங்களில் தற்போது நிலவிவரும் கடுமையான வரட்சிக் காரணமாக, நாட்டின் பிரபலமான வனவிலங்குப் பூங்காக்கள் காய்ந்து போயுள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்தது.  

யால, உடவலவ, வில்பத்து, லுனுகம்வெஹெர, புந்தன, குமுன மற்றும் கல்​லோயா போன்ற பூங்காக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த பூங்காக்களுக்கு பௌசர்கள் மூலம் நீர் விநியோகிக்கப்படுவதாகவும் இது தற்போது, நல்ல முறையில் முன்னெடுக்கப்பட்டுச் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும், இந்த வரட்சியான காலநிலை நீடிக்கும் பட்சத்தில், ஒக்டோபர் மாதத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள மாஹாபோகமும் பாதிப்படையும் என்று நீர்ப்பாசனத் ​திணைக்களம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) தெரிவித்தது. 

பராக்கிரமபாகு சமுத்திரம், மின்னேரியா, கவுதுல்ல, கிரிதலே, பொலன்னறுவை மாவட்டம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டம் போன்ற பகுதிகளிலுள்ள நீர்த்தேக்கங்களிலுள்ள நீரின் அளவு குறைவடைந்து உள்ளதாகவும் அத்திணைக்களம் தெரிவித்தது.  பொலன்னறுவை, மட்டக்களப்பு, திருகோணமலை, குருநாகல், கிளிநொச்சி, இரத்தினபுரி, வவுனியா ஆகிய பகுதிகளில், 50,910 குடும்பங்களைச் சேர்ந்த 205,045 பேர் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .