2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

பொருளாதார அன்னையை ‘விற்கிறது அரசாங்கம்’

Gavitha   / 2016 ஒக்டோபர் 04 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாநூ கார்த்திகேசு

“கொழும்புத் துறைமுகமானது, துறைமுகம் சார் விசேடத்துவம் கொண்ட நாடுகளில், பன்னிரண்டாவது இடத்தை எமது நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்துள்ளது. இதற்குக் காரணம், நாட்டின் ஏற்றுமதி - இறக்குமதிப் பொருளாதாரம் அல்ல.

நாட்டின் அமைவிடமேயாகும். பல ஏற்றுமதி - இறக்குமதி உற்பத்திகளை மேற்கொள்ளும் நாடான இந்தியாவின் துறைமுகங்கள் கூட, கொழும்புத் துறைமுகத்துக்குப் பின்னாலேயே அட்டவணைப்
படுத்தப்பட்டுள்ளன” என்று, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொரடாவுமான அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். 

பெலவத்தையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் கட்சித் தலைமைகத்தில், நேற்றுத் திங்கட்கிழமை (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,  “துறைமுகங்கள், கப்பற்துறை அமைச்சு நஷ்டத்தில் இயங்குகின்றமை உண்மை தான். அதற்குக் காரணம், ஹம்பாந்தோட்டை துறைமுகம், ஒலுவில் துறைமுகம், அம்பாறையில் அமைக்கப்பட்ட கடற்படை பயிற்சிக் கலாசாலை, சூரியவெவ மைதானம் போன்ற அரசாங்கத்தின் பயனற்ற செயற்பாடுகளே. ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தின் பொருட்டுப் பயன்படுத்த வேண்டிய நிதியை, அபிவிருத்திக்கெனப் பயன்படுத்துகின்றமையேயாகும். 

சப்புகஸ்கந்தை எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையம், 47 வருடம் பழமை வாய்ந்தது. அதனை மீளப் புனரமைக்க வேண்டிய தேவையொன்று உள்ளது. அதனை கடந்த கால அரசாங்கம் செய்யத் தவறிவிட்டது. தற்போதைய அரசாங்கம், தனியாருடன் இணைந்து செய்யக்கூடாது. சில அரச வளங்கள், தனியார் மயப்படுத்தப்பட்டால் அதனை மீட்டெடுக்க முடியாது. 

அதேபோன்றே, திருகோணமலை எண்ணெய்த் தாங்கி, இதன் மூலம் 4 மாதங்களுக்குத் தேவையான எண்ணெயைக் களஞ்சியப்படுத்த முடியும். முத்துராஜவெல, கொலன்னாவ எண்ணெய்த் தாங்கிகள் மூலம் ஒருமாதத்துக்குத் தேவையான எண்ணையையே களஞ்சியப்படுத்த முடியும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம், நாட்டின் வளத்தைக் கொண்டு நாட்டை விருத்தி செய்வதை விடுத்து, அதனை விற்பதில் குறியாக உள்ளது. குறித்த வளங்களை மேம்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும். இவ்வரசாங்கம், உடனடியாக இச்செயற்பாட்டை நிறுத்த வேண்டும்” என அவர் மேலும் கூறினார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .