2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பஞ்சாயுதத்துக்குள் அரசியல் நெருக்கடி

Kogilavani   / 2017 ஏப்ரல் 18 , பி.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர், விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணிக்குள் அரசியல் நெருக்கடி நிலையொன்று தோன்றியுள்ளதாக, முன்னணியின் உள்ளகத் தகவல் தெரிவிக்கிறது.   

இந்த நெருக்கடி நிலைமை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு, அக்கட்சியின் அரசியல்சபை, எதிர்வரும் 19ஆம் திகதியன்று கட்சியின் தலைவர் விமல்வீரவன்ச எம்.பி தலைமையில் கூடவுள்ளது என்றும் அந்தத் தகவல் தெரிவித்தது. 

அரச சொத்துக்களை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில், அடைத்துவைத்திருந்த போது, தனக்குப் பிணை வழங்குமாறுகோரி வெலிக்கடை சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்திருந்தமை, அந்த போராட்டத்தை கைவிடுவதற்காக அவர் நடத்திய நாடகம் ஆகியன காரணமாகவே, கட்சிக்குள் அரசியல் நெருக்கடி ஏற்பட்டதாக அந்தத் தகவல் தெரிவித்தது.   

தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல் சபையில் 17 அங்கத்தவர்கள் உள்ளனர். அவர்களில், ஐவர் மட்டுமே, விமல் வீரவன்சவின் உண்ணாவிரதப் போராட்டம் சரியானது என்று தெரிவித்துள்ளனர். ஏனையோர், அந்த நடவடிக்கை பிழையானது என்ற கருத்தையே கொண்டுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.   

உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக, தேசிய சுதந்திர முன்னணி தொடர்பில், மக்கள் மத்தியில் தவறான அபிபிராயம் ஒன்று ஏற்பட்டுள்ளது என்றும், உண்ணாவிரதம் இருப்பது தொடர்பில், விமல் வீரவன்ச கட்சியிடம் அனுமதி எதனையும் பெற்றிருக்கவில்லை என்றும் அந்தத் தகவல் தெரிவித்தது.   

தனக்குப் பிணை வழங்குமாறு கோரி, வெலிக்கடை சிறைச்சாலையில் மார்ச் மாதம் 21ஆம் திகதியன்று விமல் வீரவன்ச உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். 26ஆம் திகதியன்று சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.   

பின்னர், மார்ச் 29ஆம் திகதியன்று கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு சென்ற பௌத்த தேரர்கள் சிலர் கேட்டுகொண்டதற்கு இணங்க, தன்னுடைய சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை அவர், 9 நாட்களில் கைவிட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.  

விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி சின்னம் பஞ்சாயுதம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X