Editorial / 2026 ஏப்ரல் 05 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

தனது தோட்டத்தில் தேங்காய் திருடிய பெண்ணைக் கண்டித்த உரிமையாளருக்கு, அந்தப் பெண்ணே 'பாலியல் தொல்லை' புகார் அளித்து அதிர்ச்சியூட்டிய சம்பவம் மியுகுண பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறுதியில் அப்பெண்ணின் நாடகம் அம்பலமாகி, பொலிஸார் முன்னிலையில் மன்னிப்புக் கேட்டுத் தப்பினார்.
தோட்டத்திற்கு வராத உரிமையாளர்
மியுகுண பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய தம்பதியினர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகின்றனர். இவருக்குத் தனது தந்தை வழிச் சொத்தாக ஒரு தோட்டம் கிடைத்துள்ளது. அது அவர் தற்போது வசிக்கும் வீட்டிலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. வேலைப்பளு காரணமாக அந்தத் தோட்டத்திற்கு அவர்களால் அடிக்கடி செல்ல முடிவதில்லை. இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு ஒருமுறை சென்று அங்கிருக்கும் தேங்காய் மற்றும் வாழைக் குலைகளை வெட்டி வருவது அவர்களது வழக்கம்.
நேரில் சிக்கிய திருட்டு
தனது தோட்டத்தில் அவ்வப்போது தேங்காய் மற்றும் வாழைக்குலைகள் திருடப்படுவதை அவர் அறிந்திருந்தாலும், திருடர்களை அவரால் கையும் மெய்யுமாகப் பிடிக்க முடியவில்லை. இந்நிலையில், கடந்த விடுமுறை தினத்தன்று காலை 10 மணியளவில் அவர் தனது தோட்டத்திற்குச் சென்றுள்ளார். அப்போது தூரத்திலிருந்தே யாரோ ஒருவர் தோட்டத்தில் நடமாடுவதைக் கண்டுள்ளார்.
அவர் தோட்டத்திற்குள் நுழைந்தபோது, அங்கிருந்த ஒரு பெண், உரிமையாளர் வந்ததைக் கூடக் கவனிக்காமல், கீழே விழுந்து கிடந்த தேங்காய்களை ஒரு பையில் அவசர அவசரமாகச் சேகரித்துக் கொண்டிருந்தார். தனது தோட்டத்தில் துணிச்சலாகத் திருடுவதைக் கண்ட உரிமையாளர், அப்பெண்ணைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். "இன்று எடுத்த தேங்காய்களை மட்டும் எடுத்துக்கொண்டு போ, இனிமேல் இந்தப் பக்கம் தலைவைத்துக்கூடப் படுக்கக் கூடாது" என எச்சரித்துள்ளார்.
உரிமையாளரின் எச்சரிக்கையைக் கேட்டு அஞ்சாத அந்தப் பெண், மாறாக அவருக்குப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தார். "நான் தொடர்ந்து இங்கிருந்து தேங்காய் பறித்துச் செல்ல நீங்கள் அனுமதிக்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் எனக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக பொலிஸில் புகார் அளிப்பேன்" என்று பகிரங்கமாக மிரட்டியுள்ளார். ஆனால், அத்தகைய மிரட்டல்களுக்குப் பணியாத உரிமையாளர், சட்ட ரீதியாக எதையும் சந்திக்கத் தயார் எனக் கூறி அவரைத் தோட்டத்திலிருந்து வெளியேற்றியுள்ளார்.
சில மணிநேரங்களிலேயே உரிமையாளருக்கு பொலிஸ் நிலையத்திலிருந்து அழைப்பு வந்தது. அவர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பொலிஸ் நிலையம் சென்ற அவர், தேங்காய் திருடிய அதே பெண் தான் இந்தப் புகாரை அளித்துள்ளார் என்பதை உறுதிப்படுத்தினார்.
விசாரணையின் போது அந்தப் பெண் கூறிய வாக்குமூலம் பொலிஸாரையே வியப்பில் ஆழ்த்தியது. "உண்மையில் அவர் எனக்கு எந்தத் தொல்லையும் தரவில்லை. ஆனால், இனிமேல் நான் அந்தத் தோட்டத்தில் தடையின்றி தேங்காய் திருடுவதற்கு அவரைப் பணிய வைக்க வேண்டும் என்பதற்காகவே, பொலிஸாரின் உதவியை நாடி இவ்வாறான ஒரு பொய்ப் புகாரை அளித்தேன்" என்று எவ்வித குற்ற உணர்ச்சியுமின்றித் தெரிவித்துள்ளார்.
இப்புகாரின் பாரதூரமான தன்மையையும், ஒரு நபர் மீது வீண்பழி சுமத்துவதால் ஏற்படும் சட்ட விளைவுகளையும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அப்பெண்ணுக்குத் தெளிவுபடுத்தினார். பொய்ப் புகார் அளித்ததற்காக அவர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என எச்சரித்ததைத் தொடர்ந்து, அந்தப் பெண் நிலைகுலைந்து போனார்.
தனது கீழ்த்தரமான செயலுக்காக உரிமையாளரிடமும் பொலிஸாரிடமும் பகிரங்கமாக மன்னிப்புக் கோரிய அவர், இனிமேல் அந்தத் தோட்டத்தின் பக்கம் கூடச் செல்லமாட்டேன் என உறுதி அளித்தார். அவரின் மன்னிப்பை ஏற்றுக்கொண்ட பொலிஸார், மீண்டும் ஒருமுறை எச்சரித்து வழக்கைச் சமரசமாக முடித்து வைத்தனர்.
42 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
3 hours ago
3 hours ago