2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

புதிய அரசமைப்புப் பேரவை; முதன்முறையாக இன்று கூடுகிறது

Editorial   / 2018 ஒக்டோபர் 12 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிரோஷினி

புதிய அரசமைப்புப் பேரவையில் உள்ளடக்கப்படவுள்ள, சிவில் செயற்பாட்டாளர்கள் மூவருக்கு, நாடாளுமன்றம் நேற்று (11) அனுமதி அளித்தது.

இதன் பிரகாரம், புதியஅரசமைப்புப் பேரவையானது, இன்று (12) நண்பகல் 12 மணிக்கு, முதன்முறையாகக் கூடவுள்ளதோடு, அதன்போது, புதிய பிரதம நீதியரசரைத் தெரிவு செய்வது தொடர்பில் கலந்துரையாடப்படுமென, சபாநாயகர் கரு ஜயசூரிய, சபையில் நேற்று அறிவித்தார்.

மேற்படி அரசமைப்புப் பேரவையின் 10 உறுப்பினர்களது பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், அதில், பிரதமர், சபாநாயகர், எதி​ர்க்கட்சித் தலைவர் ஆகியோரது பெயர்கள், உத்தியோகபூர்வமாகவே, அச்சபையில் உள்ளடக்கப்பட்டு விடும்.

இந்நிலையில், ஜனாதிபதியின் பிரதிநிதியாக, அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும் எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதியாக, நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவும் பிரதமரின் பிரதிநிதியாக, அமைச்சர் தலத்தா அத்துகோரலவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், சிறு கட்சிகளின் பிரதிநிதியாக, நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோன்று, மேற்படி புதிய அரசமைப்புச் சபையின் சிவில் செயற்பாட்டாளர்களாகப் பரிந்துரைக்கப்பட்ட பேராசிரியர் ஜயந்த தனபால, சட்டத்தரணி அஹமட் ஜாவிட் யூசூப் மற்றும் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகநாதன் செல்வகுமாரன் ஆகியோருக்கு, நாடாளுமன்றம் அனுமதியளித்தது.

அரசமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கமைய நியமிக்கப்பட்டுள்ள இந்தப் புதிய அரசமைப்புப் பேரவையின் ஆயுட்காலம், 3 வருடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .