2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மின்துண்டிப்பு செயற்பாடுகள் நீடிப்பதற்கு இடமளிக்காதீர்கள்

Princiya Dixci   / 2016 மார்ச் 19 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுமக்களின் நலன்களை கருத்திற்கொண்டு நாடாளவிய ரீதியில் மின்துண்டிப்பு செயற்பாடுகள் நீடிப்பதற்கு இடமளிக்க வேண்டாம். அதற்குரிய நடவடிக்கைகளை உடன்முன்னெடுக்கவேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரியவிடத்தில் கோரிக்கை விடுத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளர் சி.வை.பி.ராம் தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென நாட்டில் ஏற்பட்ட மின்சாரத்தடையைத் தொடர்ந்து தொடர்ச்சியாக முன்னறிவிப்பற்ற மின்துண்டிப்புக்கள் இடம்பெற்று வருகின்றமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென நாட்டில் மின்தடை ஏற்பட்டது. ஏழு மணித்தியாலங்கள் வரையில் நீடித்த இம்மின்தடையால் நாடு இருளில் மூழ்கியது. இதனால் பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர். அது மட்டுமன்றி நாட்டின் உற்பத்திகள் முதல் அனைத்து நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடைய வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

அதனைத்தொடர்ந்த தற்போதைய நாட்களிலும் மின்துண்டிப்புக்கள் தொடர்ந்தவண்ணமுள்ளன. இதனாலும் பொதுமக்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களும் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். 

மின்சாரத்துண்டிப்பு ஒருபுறமிருக்கையில் அதனோடு ஒத்ததாக நீர் விநியோகச் செயற்பாடுகளும் அவ்வவ்போது இடைநிறுத்தப்பட்டுவருகின்றன. தற்போது பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையுடன் ஒன்றித்துப்போயுள்ள நீர் மற்றும் மின்சாரம் தடைப்படுவதானது அவர்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிப்பதாகவே உள்ளன. 

ஆகவே, இவ்வாறான நிலைமைகள் தொடர்ந்தும் இடம்பெறுவதற்கு இடமளிக்ககூடாது. இதற்குரிய நடவடிக்கைகளை பிரதமர் மற்றும் சபாநாகர் ஆகியோர் தலையிட்டு முன்னெடுக்கவேண்டும். 

மேலும், குறித்த துண்டிப்புக்களுக்கான உண்மைக்காரணங்கள் கண்டறியப்பட்டு எதிர்வரும் நாட்களில் இவ்வாறான நிலமைகள் ஏற்படாமலிருப்பதை உறுதி செய்யவேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளேன்.

அது மட்டுமன்றி மின்சாரத்துண்டிப்பானது நாட்டின் பொருளதாரத்தையும் பாதிப்புக்குள்ளாக்கும் நிலைமைகளும் காணப்படுகின்றன. இந்த ஆண்டு பொருளாதரத்தை கட்டியெழுப்புவதையே இலக்காக கொண்டுள்ள நிலையில் இவ்வாறான தடங்கல்கள் அந்த இலக்கை அடைவதையும் வெகுவாகப் பாதிக்கும். 

எனவே, நாட்டின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதற்காக அரசாங்கம் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் தற்போதைய தருணத்தில் இவ்வாறான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் காரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டியது அவசியம் எனக் கோரியுள்ளேன் என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .