2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மக்களுக்கு ஆழமான பிரச்சினைகள் உள்ளன: லால் விஜேநாயக்க

Kanagaraj   / 2016 மார்ச் 09 , பி.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மேற்கில், மிகவும் இலகுவாகத் தீர்க்கக்கூடிய பிரச்சினைகள், இன்று ஆழமான பிரச்சினைகளாக உருவாகியுள்ளன. அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல், எவ்வளவு சிறந்த அரசியலமைப்பை உருவாக்கினாலும், சில நேரங்களில் அதனால் மக்களுக்கு பலன்கிடைக்காது என்பதை எம்மால் உணர முடிந்தது' என்று அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பாக மக்களின் கருத்துக்களைக் கேட்டறியும் குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினரை நேற்று புதன்கிழமை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

'மக்களின் அபிப்பிராயங்களைக் கேட்டறியும் எமது குழு, மக்களின் கருத்தறியும் பணிகளை தற்போது நிறைவு செய்துள்ளது. நாம் சந்திக்க வேண்டும் என்று கருதும் நபர்கள் மற்றும் குழுக்களை எதிர்வரும் ஒரு மாத காலப்பகுதிக்குள் சந்திக்க எதிர்பார்த்துள்ளோம்.

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனை இன்று (நேற்று)  சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். இது மிகவும் பலமிக்க கலந்துரையாடலாக அமைந்திருந்தது. பிரச்சினைகளை அரசியலமைப்பு ஊடாக தீர்த்துக் கொள்வது நாம் கருதியது போன்று அவ்வளவு சிரமமாக இருக்காது என்று இந்த கலந்துரையாடலின் போது தெரியவந்தது.

சம்பந்தன் தரப்பில் இருந்து விசேட யோசனைகள் எதுவும் இதன்போது முன்வைக்கப்படவில்லை. அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியலமைப்பொன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பில் அவர் மிகவும் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை முன்வைத்தார்.

இனங்களுக்கு இடையில் அந்நியோன்யத்தை ஏற்படுத்தி தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தும் அரசியலமைப்பொன்றையே மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்பதை எதிர்க்கட்சித் தலைவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

பிரமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரிமாளிகையில், நாளை (இன்று வியாழக்கிழமை) மாலை சந்திக்கவுள்ளோம்.
இறுதி அறிக்கையை ஏப்ரல் மாத இறுதியில் சமர்ப்பிக்க நாம் எதிர்பார்க்கிறோம். அவ்வறிக்கையில் மக்களிடம் பெறப்பட்ட அபிப்பிராயங்களை உள்ளடக்கியிருக்கும் என்பதுடன் எமது பரிந்துரைகளையும் முன்வைப்போம்' என்றார்.
'நடைமுறையில் உள்ள அரசியலமைப்பினால் மக்களுக்குப் பாதுகாப்புக் கிடைத்திருக்கவில்லை. மக்கள் காணாமற்போனார்கள், ஆசிரியர்களை மண்டியிட வைத்தார்கள், அரச அதிகாரிகளை மரத்தில் கட்டிவைத்தனர்.

இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெற்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டவர்களில் பலர் கொல்லப்பட்டனர். இவை தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை. அப்படியாயின், அரசியலமைப்பு பலவீனமாகவுள்ளது என்பதே அர்த்தமாகும்' என்றார்.
'ஆகவே, இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் மக்களுக்கு ஏற்படாதிருப்பதை உறுதிசெய்யும் புதிய அரசிலமைப்பொன்றே ஏற்படுத்தப்பட வேண்டும். எமக்கு மொத்தமாக சுமார் 5 ஆயிரம் அபிப்பிராயங்கள் கிடைத்துள்ளன.

வெளிநாடுகளில் இருந்தும் அபிப்பிராயங்கள் வழங்குவதற்குக் கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன. எனினும், அதை செய்ய எமக்கு போதிய வசதிகள் இல்லாமையினால் அந்த கடிதத்தை நாம், பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளோம் என்றார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .