2026 மே 14, வியாழக்கிழமை

dd

’மனித உயிர்களே பெறுமதியானவை’

Niroshini   / 2021 மே 24 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் இன்றைய நிலையில், உயிர்களைப் பாதுகாப்பதற்கு மட்டுமே முன்னுரிமையளிக்கப்பட வேண்டுமெனத் தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா, மனித உயிர்களைக் காப்பாற்றினால் மாத்திரமே, ஏனைய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்றும் எனவே, இந்த நேரத்தில் பெறுமதியான மனித வளங்களைப் பாதுகாப்பது அவசியமென்றும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்துரைத்த அவர், சமூகத்தில் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களை விட 3 மடங்கு தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்கலாம் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே குறிப்பிடுவதாகவும் தமக்கு இத்தொற்று ஏற்பட்டுள்ளதை அறியாமல் பலர் இருக்கலாம் என்ற நிலைமையிலேயே, இவ்வாறான சிக்கல் தோன்றியுள்ளதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவதாக, பிசிஆர், அன்டிஜன் மூலம் தொற்று உறுதிப்படுத்தப்பட்டால், மிகவும் மோசமான நிலைமையின் கீழ் தனிமைப்படுத்தல் நிலையங்களில் அல்லது வைத்தியசாலைகளில் தங்கியிருக்க நேரிடும் என்ற பயத்தாலும் தமது உறவுகளைப் பிரிந்திருக்க வேண்டும் என்ற அச்சத்தாலும், தொற்று உறுதிப்படுத்தப்பட்டாலும் வைத்தியசாலைக்கு செல்லவோ அது குறித்து அதிகாரிகளுக்கு தெரிவிக்கவோ மக்கள் முன்வருவதில்லை என்றும் குறிப்பிட்ட பெரேரா, இதனால் சமூகத்தில் உள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்றார்.

“மரண எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும்  தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்றவற்றால், நாம் பாரிய மனித வலு நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேரிடும். எனவே, முடக்கம், பயணக்கட்டுப்பாடு நடைமுறைகளை உரிய முறையில், உரிய சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றிச் செயற்படுத்துவதற்கு மேலதிகமாக, அதி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அதிக பணத்தை முதலீடு செய்ய வேண்டும்.

“எனவே, பணம் இல்லை என்ற இடத்துக்குச் செல்லாமல், சுகாதார வசதிகளை மேம்படுத்தவும் மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைளை விரைவுபடுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .