2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல்

Janu   / 2025 ஜூன் 19 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்த நிலையில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி விரட்டி அடித்ததாக கரை திரும்பிய மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளதுடன் எதிர்பார்த்த மீன் பிடி இல்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசால் ஆண்டுதோறும் அமுல் படுத்தப்படும் மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி தொடங்கி ஜூன் மாதம் 14ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைந்தது.

மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்த நிலையில் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கடந்த திங்கட்கிழமை அன்று மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தயாரான நிலையில் வங்க கடலில் வீசிய சூறைக்காற்று காரணமாக அரசங்கத்தால் மீனவர்களுக்கு வழங்கப்படும்  மீன்பிடி அனுமதிச்சீட்டு ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து மீன்பிடி தடைக்காலம் முடிந்து 64 நாட்கள் பின் புதன்கிழமை (18) அன்று ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

மீனவர்கள் கச்சத் தீவுக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே மீன் பிடித்து கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவர்களை விரட்டி அடித்ததாகவும், ஒரு சில படகில் இருந்த மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால்  பெருத்த நஷ்டத்துடன் கரை திரும்பியதாக மீனவர்கள்  தெரிவித்துள்ளனர்.

மேலும் தடை காலம் முடிந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு இறால், நண்டு கணவாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன்கள் அதிகளவு கிடைக்கும்.ஆனால் மீன்பிடி தடைக் காலத்தின்  போது இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டதால் தடை காலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற விசைப்படகு மீனவர்கள் எதிர்பார்த்த மீன்பாடு  இல்லை இதனால் படகு ஒன்றுக்கு சுமார் 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

 இதே வேளை மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்த நிலையில்,இலங்கை கடல் எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் தெரிவித்ததோடு,கடற் படையினரின் உதவியுடன் இந்திய மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக வடக்கு மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 எஸ்.ஆர்.லெம்பேட்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X