2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மேல்முறையீடு செய்த ராகுலுக்கு பிணை நீட்டிப்பு

Editorial   / 2023 ஏப்ரல் 03 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட  இரண்டு ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து, காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஏப். 3) சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரது பிணை நீட்டித்த நீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணையை இம்மாதம் 13ம் திகதிக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது கர்நாடக மாநிலத்தில் பிரசாரம் செய்த காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி (52), ‘மோடி’ என்று பெயர் உள்ளவர்கள் குறித்து அவர் விமர்சித்தார்.

வங்கிக் கடன் மோசடியில் வெளிநாடு தப்பிச் சென்ற வைர வியாபாரி நீரவ் மோடி, ஐபிஎல் கிரிக்கெட் மோசடி புகாரில் சிக்கி, வெளிநாடு தப்பிய லலித் மோடி என்று குற்றம் செய்தவர்கள் பெயர்கள் எல்லாம் ‘மோடி’ என்றே முடிகிறது என்று பேசினார்.

அப்போது, பிரதமர் நரேந்திர மோடி பெயரையும் அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் மோடி சமூகத்தினரை ராகுல் காந்தி இழிவுபடுத்திவிட்டதாகப் புகார்கள் எழுந்தன. ராகுல் காந்தியின் பேச்சுக்கு பாரதிய ஜனதா கட்சியினர் (பா.ஜ.க) வினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து, ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத்மேற்கு தொகுதி பா.ஜ.க எம்எல்ஏ புர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.

சூரத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு கடந்த 4 ஆண்டுகளாக விசாரணையில் இருந்தநிலையில், கடந்த மாதம் 23-ம் திகதி ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் தலைமை ஜுடீசியல் மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா தீர்ப்பளித்தார்.

இந்திய தண்டனை சட்டம் 499 மற்றும் 500-வது பிரிவுகளின் கீழ் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. எனினும், உடனடியாக ராகுல் காந்திக்கு நீதிமன்றம் ஜாமீனும் அளித்தது. அத்துடன், மேல்முறையீடு செய்வதற்காக சிறை தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இரண்டு மனுக்கள்: சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி இன்று (ஏப்.3) மேல் முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுடன் மேலும் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஒன்று தண்டனையை ரத்து செய்வது தொடர்பானது, இரண்டாவது தீர்ப்பினை ரத்து செய்வது தொடர்பானது.

இந்த நிலையில், சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு பிணை வழங்கி, வழக்கை ஏப்ரல் 13-ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவதாக தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .