2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ரணிலுக்கு நேரடியாகவும் மஹிந்தவுக்கு மறைமுகமாகவும் அடித்தார் சந்திரிகா

Gavitha   / 2017 ஜனவரி 10 , பி.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்  

தனக்கு இடமளித்திருந்தால், ஆகக்கூடிய அதிகார பகிர்வுடனான புதிய அரசியலமைப்பை உருவாக்கியிருப்பேன் எனக்கூறிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, அதற்கு ரணில் விக்கிரமசிங்க இடமளிக்கவில்லை என்றும், தான் செய்ததையே இப்போது அவர் செய்கின்றார் என்றும் கூறினார். 

தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

கேள்வி நேரத்தின் போது, “நீங்கள் (சந்திரிகா) தயாரித்திருக்கும் புதிய அரசியலமைப்பு நல்லது என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அன்று தெரிவித்திருந்தார். அந்த நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்க, உங்களது அரசியலமைப்புக்குக் கடும் எதிர்ப்பினைக் காட்டினார். இன்று புதிய அரசியலமைப்பை கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது சாத்தியமாகுமா?” என்று வினவினர்.  

கேள்விக்குப் பதிலளித்த சந்திரிகா, “அதுதான் மனித தன்மையாகும். என்னுடைய அரசியலமைப்பை அன்று வேண்டாமெனக் கூறிய ரணில் தான், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு இன்று முயல்கிறார். 

“என்னால் தயாரிக்கப்பட்ட அரசிலமைப்புக்கு ஆதரவு தெரிவித்திருந்தால், இன்னும் நான் அதிகாரத்தில் இருந்திருப்பேன். ஆனால், ரணிலை அதிகாரத்துக்கு கொண்டுவந்து, பிரதமராக்கியதுடன், மற்றுமொருவரை ஜனாதிபதியாக்கினேன்.  

“அதிகாரப் பகிர்வு விடயத்துக்கு சிங்கள மக்கள் மத்தியில் 25 சதவீதமான ஆதரவே கிடைத்தது. எனினும், என்னுடைய வேலைத்திட்டங்களினால் அந்த ஆதரவை 68 சதவீதமான அதிகரித்தேன். சிறுபான்மையின மக்களின் ஆதரவையும் திரட்டியிருந்தால், அதிகார பகிர்வுக்கு 85 சதவீதமான ஆதரவு கிடைத்திருக்கும். ஜனநாயக நாடொன்றில், ஒரு சிறு பிரிவினர் எதிர்ப்பை வெளிக்காட்டுவது பிரச்சினையில்லை.  

“எனினும், தான் அன்று உருவாக்கவிருந்த அரசியலமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, தற்போது புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றார்” என்றும் கூறினார்.  

“என்னுடைய காலத்தில் இருந்ததைவிடவும் பிரிவினைவாதம் தற்போது கூடியுள்ளது. முன்னாள் ஜனாதிபதியே, அந்தப் பிரிவுக்கு தலைவராக இருந்துகொண்டிருக்கின்றார்” என்றும் சந்திரிகா குற்றஞ்சாட்டினார்.
(இதன்போது அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயரை குறிப்பிடாமலே இக்கருத்தை வெளிப்படுத்தினார்).  

இதேவேளை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க கூடாதுதென்று, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் எவ்விதமான தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. தானே, கட்சியின் சிரேஷ்ட தலைவர் என்றும் சந்திரிகா இதன்போது கூறினார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .