2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

வடக்கு காணி விவகாரம்: இருநாள் கள விஜயம்

Kanagaraj   / 2017 ஏப்ரல் 17 , பி.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா திபான் 

வடக்கு காணி விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு, கள விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது.  

அந்தக் கள விஜயத்தின் பின்னரே, காணிப்பிரச்சினைக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்கமுடியும் என்றும் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதன்பிரகாரம், நாளை 19ஆம் திகதி முல்லைத்தீவுக்கும் மறுநாள் 20 ஆம் திகதி காலையில் யாழ்ப்பாணத்துக்கும், மாலையில் கிளிநொச்சிக்கும் சென்று  காணிப் பிரச்சினைகளை அக்குழு ஆராயவுள்ளது. 

இந்த தகவலை, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.  

வடக்கு, காணி விவகாரம் தொடர்பில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தலைமையிலான குழுவினருக்கும், இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினருக்கும் இடையில், பாதுகாப்பு அமைச்சில், முக்கிய பேச்சுவார்த்தையொன்று நேற்று (17)  இடம்பெற்றது.  

இந்த பேச்சுவார்த்தையை அடுத்து, கொழும்பு-7 இலுள்ள, எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்றுப் பிற்பகல் (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்தாவது, 

“தங்களுடைய காணிகளில் வாழ்வதற்கு, அந்த மக்கள் உரித்துடையவர்கள். அவற்றைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது எங்களுடைய கடமை. அந்த உரிமையை மறுப்பது தவறு. அதனால், அவற்றை மக்களுக்குத் திருப்பிக் கொடுக்கவேண்டும் என்பதை இன்றைய(நேற்றைய) சந்திப்பில் வலியுறுத்தினோம். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, சனிக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினோம். அவரின் வேண்டுகோளுக்கு இணங்கவே, இன்றைய (நேற்றைய) சந்திப்பு நடத்தப்பட்டது. இந்தச் சந்திப்புத் தொடர்பில், ஜனாதிபதிக்கு அறிவிப்போம். அவருடைய ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்போம். 

யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில், இராணுவத் தளங்களைத் தாக்ககூடிய ஆயுங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்தன. அந்தக் காரணத்தின் நிமிர்த்தம், அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் ஆரம்பிக்கப்பட்டன. தற்போது யுத்தம் முடிவடைந்து விட்டது. புலிகளும் இல்லை. அவர்களுடைய ஆயுதங்களும் இல்லை. 

யுத்தக் காலத்தில் பல்வேறு காரணங்களுக்காக காணிகளைக் கைப்பற்றியுள்ளீர்கள். புலிகள் வசமிருந்த காணிகள் கைப்பற்றப்பட்டு, இன்னும் உங்களிடம் இருக்கிறது. சில காணிகள், பரம்பரை பரம்பரையாக மக்கள் வாழ்ந்தவை. சில காணிகள் அரசாங்கத்தின் காணிப்பத்திரத்தின் ஊடாக மக்களுக்கு வழங்கப்பட்டவையாகும். 

அந்தக் காணிகளில் வாழ, அந்த மக்கள் உரித்துடையவர்கள். அவற்றைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது எங்களுடைய கடமையாகும். அந்த உரிமையை மறுப்பது தவறு. அதனால், அவற்றை மக்களுக்குத் திருப்பிக் கொடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தினோம். 

அதற்குப் பதிலளித்த இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிருஷாந்த டி சில்வா, ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் பணித்தால், காணிகளை விடுவிக்கவேண்டியது தங்களது கடமை என்றும், காணிகளைச் சட்டவிரோதமாக தங்களால் வைத்திருக்கமுடியாது என்றும் கூறினார். 

முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் இராணுவத்தளம் அமைந்திருக்கின்ற பிரதேசத்தில் தாங்கள் குடியேற வேண்டும் என்றும் அவை தங்களுடை பரம்பரையான காணிகள் என்றும் மக்கள் கோரியுள்ளனர். 

அந்தக் காணியில் சிறுபகுதி தேவை என்றும் ஏனையவற்றை விடுவிக்கத் தயார் என்றும், தளபாடங்களை அகற்றி வேறு இடங்களுக்குச் செல்வதற்கு கால அவகாசம் வேண்டும் என்றும் இராணுவத்தினர் கோரியுள்ளனர். 

இந்நிலையில், எம்.பிக்களான சிவமோகன், சாந்தி ஸ்ரீஸ்கந்த ராஜா ஆகியோருடன், சுமந்திரன் எம்.பியும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள், இராணுவ அதிகாரிகள், மக்களுடைய பிரதிநிதிகளுடன் சென்று, எதிர்வரும் 19ஆம் மற்றும் 20ஆம் திகதிகளில் இடத்தைப் பார்வையிட்டு, முடிவுகளை எடுக்கவுள்ளனர்.  

வலிகாமத்தைப் பொறுத்தவரை, தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவுக்குள் 4,500 ஏக்கர் காணி இன்னுமும் அரசாங்கத்திடம் இருக்கிறது. 750 ஏக்கர் காணி யாழ். மாவட்டத்தில் ஏனைய பகுதிகளில் உள்ளது. 

வலிகாமத்தில் 2,800 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் மாவை சேனாதிராசா எம்.பி, சுமந்திரன் எம்.பி ஆகியோர், அரசாங்க அதிபர் மற்றும் இராணுவ அதிகாரிகளுடன் சென்று இடங்களைப் பார்வையிடுவர். 

கிளிநொச்சியில், 20ஆம் திகதி மாலை சிறிதரன் எம்.பி மற்றும் ஏனைய எம்.பிக்களுடன் அரசாங்க அதிபரையும் உள்ளடக்கி கூட்டம் நடைபெறும். 

இந்த முடிவுகள் எடுக்கப்பட்ட பின்னர், காணிப் பிரச்சினைகள் தொடர்பில் பட்டியலைத் தயாரித்து, அரசாங்க அதிபர்களையும் இராணுவ அதிகாரிகளைம் அழைத்து, பாதுகாப்புச் செயலாளரின் அலுவலகத்தில் மீண்டும் கூடி, அவை தொடர்பில் முடிவு எடுக்கப்படும்.  

எங்களுடைய காணிகள், எங்களுக்குத் திருப்பித் தரப்பட வேண்டும். அவற்றை விட்டுக்கொடுக்கத் தயாரில்லை. சில பாதுகாப்பு ஒழுங்குகளுக்கு, உதாரணமாக, வலிகாமத்தில், விமான நிலையம் அமைக்க காணி தேவைப்பட்டால் அதை விடலாம். அந்தக் காரணத்துக்காக ஏனைய காணிகளை விடுபடுவது தாமதிக்கப்படவேண்டியதில்லை.  

கடந்த 25-30 வருடங்களாக, தங்களுடை காணிகளுக்குச் செல்ல முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். இந்த நிலைமை தொடர முடியாது. இதற்கொரு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும் என்பதைத் தெளிவாகக் கூறியுள்ளோம். சில காணிகள் தேவையாக உள்ளதால், ஏனைய காணிகளைக் கொடுப்பதை தாமதிக்க முடியாது என்பதை வலியுறுத்தியுள்ளோம். இன்று ஆரம்பித்துள்ள இந்த முயற்சி தொடரும். இதற்கொரு முடிவு கட்டுவோம்” என்றார்.  

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X