Editorial / 2025 ஜூலை 15 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் கந்து வட்டி கும்பலை சேர்ந்த நால்வர் மல்லாகம் நீதவான் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கந்து வட்டிக்கு பணம் வாங்கிய நபர், பணத்தை மீள கொடுக்க தவறியமையால் கந்து வட்டிக்கு பணம் கொடுத்தவர், மேலும் மூவருடன் இணைந்து , பணம் பெற்றவரை இளவாலை பகுதிக்கு கடத்தி சென்று , நிர்வாணமாக்கி , அவரை மோசமாக தாக்கி ,சித்திரவதைகள் புரிந்து அதை தனது திறன்பேசியில் காணொளியாகவும் பதிவு செய்துள்ளனர்.
அதன் பின்னர் அவரை மிரட்டி விடுவித்த நிலையில், அவர் தனக்கு நேர்ந்த கொடுமைகள் தொடர்பாக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் ,குடும்பஸ்தர் ஒருவரை கடத்தி சென்றமை , தாக்கியமை , சித்திரவதை புரிந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் வட்டிக்கு பணம் கொடுத்தவர் உள்ளிட்ட நால்வரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்
விசாரணைகளின் பின்னர் நால்வரையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் , நால்வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.
அதேவேளை , சித்திரவதை மற்றும் தாக்குதல்களை காணொளியாக பதிவு செய்த திறன் பேசிகளை பகுப்பாய்வுக்கு உட்படுத்தவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மருதனார் மட பகுதியில் கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர் ஒருவர் கடந்த வருடம் , தன்னிடம் பணம் பெற்று , அவற்றை திருப்பி செலுத்த தவறியவர்களை கடத்தி சென்று தோட்ட வெளி ஒன்றில் நிர்வாணமாக்கி தாக்கி , சித்திரவதைகள் புரிந்து அவற்றை தனது தொலைபேசியில் காணொளியாக பதிவேற்றி வைத்துள்ளார்.
அவற்றில் சில காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியதை அடுத்து , அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாகம் பொலிஸார் குறித்த கந்து வட்டி கும்பலை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தி இருந்தனர்.
இந்நிலையில் தற்போதும் அதே பாணியில் வட்டி பணம் வாங்க முற்பட்ட கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .