2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

வெளிநாடு செல்ல முயன்ற 91 பேர் கைது

Editorial   / 2022 ஜூன் 08 , பி.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


மாரவில பிரதேசத்திலும் மேற்கு கடற்பரப்பிலும் நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக வெளிநாடு தப்பிச் செல்ல முயன்ற 91 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மேற்கு கடற்படை கட்டளைப் பிரிவின் குழுவொன்று மாரவில பொலிஸாருடன் இணைந்து நேற்று (07) காலை மாரவில பகுதியில் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையில்,
கடல்மார்க்கமாக சட்டவிரோதமாக தப்பிச்செல்ல முயன்றவர்கள் என சந்தேகிக்கப்படும் 13 ஆண்கள், ஒரு சிறுவன் மற்றும் ஆட்கடத்தலுடன் தொடர்புடைய நபர் ஒருவர் உட்பட 9 முதல் 58 வயதுக்குட்பட்ட 15 ஆண்கள் அப்பகுதியில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டனர்.

அத்துடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வான் மற்றும் கார் ஒன்றையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, சிலாபம் கடற்கரையில் நேற்று (07) பிற்பகல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த கடற்படை கட்டளைப்பிரிவின் குழுவினர் சந்தேகத்துக்கிடமான பல நாள் மீன்பிடி படகொன்றை அவதானித்து சோதனை மேற்கொண்டனர்.

அதில், 58 ஆண்கள், 5 பெண்கள், 6 குழந்தைகள் மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் என ஒன்று முதல் 62 வயதுக்குட்பட்ட 76 பேர் கைது செய்யப்பட்டதுடன், பல நாள் மீன்பிடிக் படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மாரவிலவில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம், திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் மாரவில ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மாரவில பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சிலாபம் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம், கல்பிட்டி, மாரவில, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாகவும் மிகவும் ஆபத்தான வகையிலும் நாட்டிலிருந்து வெளியேற்ற முயலும் ஆட்கடத்தல்காரர்களுக்கு இரையாகி தமது உயிர்களையும் உடமைகளையும் பணயம் வைப்பதைத் தவிர்க்குமாறும் கடற்படை பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், இதற்காக பயன்படுத்தப்படும் படகுகள் காலாவதியான மீன்பிடி படகுகள் எனவும், அவற்றின் ஊடாக சட்டவிரோதமாகக் குடிபெயர முற்பட்டால் உயிருக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் கடற்படை எச்சரித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X