Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.என்.எம்.புஹாரி
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரச காணி தொடர்பான பிரச்சினைகள் பூதாகரமாக வெடித்துள்ளதாகவும் இதற்கு தற்போது நடைமுறையில் உள்ள அரச காணிச்சட்டங்களின் சில இறுக்கமான ஏற்பாடுகளே காரணமாகும். இதனால், அரச காணிப்பிணக்குகளுக்கு முழுமையான தீர்வு பெற்றுக்கொடுக்க முடியாத சூழ்நிலை தோன்றியுள்ளதாகவும் இத்தகையை பிணக்குகளுக்கு தீர்வு காண குறித்த சட்டங்களின் ஏற்பாடுகள் பல திருத்தப்பட வேண்டும் என இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் சட்டத்தரணி முஹம்மட் லத்தீப் பைஸர் தெரிவித்தார்.
மூதூர் கங்குவேலி கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள முதலைமடு படுகாட்டு வயல் காணிப் பிணக்கு, தோப்பூர் நீனாக்கேணி 49 ஏக்கர் மேட்டுக்காணி மற்றும் தோப்பூர் செல்வநகர் 1000 ஏக்கர் காணிப்பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்ட நடவடிக்கை ஊடாக தீர்வுபெற்றுக்கொடுப்பது பற்றிய கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை திருகோணமலை நீதிமன்ற வளாகத்தில் அமைந்திருக்கும் இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் பிரதான நிலையத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'அரச காணிக்கொள்கைகளை கையாளும் காணி அபிவிருத்தி கட்டளைச்சட்டத்தின் பல ஏற்பாடுகள் தனிநபர்களுக்கிடையிலான அரச காணிப் பிணக்குகளை தீர்ப்பதில் காலதாமதத்தையும் சிக்கல்தன்மையையும் தோற்றுவித்துள்ளது.
இவ்வாறான நிலை தொடர்வதால் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீள்குடியேறிய மக்களின் காணிப்பிணக்குகள் பலவற்றிற்கு தீர்வுபெற்றுக் கொடுப்பது நிலுவையில் இருந்து வருவதாகவும் அவர்களுக்கான மீள்குடியேற்ற உதவிகளைப் பெறுவதில் சிக்கல்களைத் தோற்றிவித்திருப்பதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காணி அபிவிருத்தி கட்டளைச்சட்டத்தின் அட்டவணை-01 இலுள்ள வழியுரிமையாளர்கள் பட்டியல், சீவிய உரித்தாளர்களுக்கு காணி கைமாற்றல் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள மட்டுப்பாடு, பின்னுரித்தாளர்கள் நியமனம் தொடர்பான வரம்பு எல்லை மற்றும் அரச காணி தொடர்பான ஆட்சியுரிமை மட்டுப்பாடுகள் என்பன தளர்த்தப்பட்டு பொருத்தமான நிபந்தனைகளுடன் கூடிய திருத்தங்கள் கொண்டுவரப்படவிட்டால் அரச காணிப்பிணக்குகள் மேலும் வலுப்பெற்று பிணக்குகளை அதிகரிக்கும் சாத்தியப்பாடு காணப்படலாம்.
அரச காணி சம்பந்தமான நிர்வாக நடைமுறைகள் பிரதேச செயலகத்திற்கு செயலகம் மாறுபட்டு பயன்படுத்தப்படுவதாக அறியக்கிடைத்துள்ளதாகவும் இது சட்டத்தின் ஏற்பாடுகளை மீறும் செயல். அரச காணிப்பிணக்குகளை வினைத்திறனாக தீர்ப்பதற்கு பிணிக்கும் தன்மையுள்ள தனியான விசேட நீதிமன்ற பொறிமுறை அல்லது மத்தியஸ்த விசாரணைப் பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்படுவதே இத்தகையை பிரச்சினைகளை தீர்க்க வழிசமைக்கும். அரச காணி ஆட்சியுரிமைகள் தொடர்பான பிரச்சினைகளை கவனம் செலுத்துவதற்கு, உத்தேசிக்கப்பட்டுள்ள விசேட ஏற்பாடுகள் அடங்கிய சட்ட வரைபை உடனடியாக சட்டமாக்குவது தற்போதைய பிரச்சினைகளை தணிக்கும் ஒரு முன்னேற்பாடாக அமையும்' என்றார்.
25 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago