2026 மார்ச் 23, திங்கட்கிழமை

'கடற்படையினரின் வசமுள்ள பாடசாலையை கையளிக்கவும்'

Niroshini   / 2016 ஜனவரி 03 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
 
திருகோணமலை சம்பூர் பிரதேசத்தில் கடற்படையினரின் வசமுள்ள சம்பூர் மகா வித்தியாலயத்தை மக்களிடம் கையளிக்க வேண்டும் என்று கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். ஜெயராஜா தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் கிழக்கு மாகாண முதலமைச்சர், மற்றும் மாகாணக் கல்வி அமைச்சர் ஆகியோருக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த 2006ஆம் ஆண்டு திருகோணமலை-மூதூர் கிழக்குப் பிரதேசத்தில் இடம்பெற்ற ஆயுத வன்முறைகளினால், சம்பூர் பிரதேச மக்கள் தமது பூர்வீக இடங்களை விட்டு இடம்பெயர நேரிட்டது.

அதன் பின்னர் கடந்த 10 வருடங்களாக சம்பூர் மகா வித்தியாலயமும் அதனைச் சூழவுள்ள பெருந்தொகையான குடிநிலப்பரப்பும் இன்னமும் கடற்படை முகாமாகவும் கடற்படையினரின் ஏனைய தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆனால், 2015ஆம் ஆண்டு அதிகாரத்துக்கு வந்த நல்லாட்சிக்கான அரசாங்கம், மக்களுக்குச் சொந்தமான காணிகளை அந்த மக்களுக்கே வழங்க வேண்டும் என்பதில் சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது.

அதன் பின்னணியில் 818 ஏக்கர் குடியிருப்பு நிலம் மக்கள் பாவனைக்கு வழங்கப்படல் வேண்டுமென நீதிமன்றத் தீர்ப்பும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரதேச மக்கள், விடுவிக்கப்பட்ட தமது காணிகளில் குடியமர்த்தப்பட்டுத் தற்காலிக கூடாரங்களில் தற்போது வசித்து வருகின்றனர்.

ஆனால், அந்த குடியிருப்புப் பிரதேசத்;துக்கு மத்தியில் அமைந்துள்ள சம்பூர் மகா வித்தியாலயம் இன்னமும் மக்களிடம் கையளிக்கப்படவில்லை.

2 அல்லது 3 மாதங்களில் இப் பாடசாலை, மாணவர்களின் கல்விச் செயற்பாட்டிற்காக வழங்கப்படுமென கடற்படையினரால் உறுதியளிக்கப்பட்ட போதும், அது நிறைவேற்றப்படவில்லை.

இதனால் தற்பொழுது மீள்குடியேற்றப்பட்ட மாணவர்கள் நீண்ட தூரப் பயணம் செய்தே வேறு இடங்களில் இயங்கும் பாடசாலைகளில் தமது கல்வியைத் தொடரவேண்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

'இதேவேளை, தற்போது பாடசாலையில் நிலைகொண்டுள்ள கடற்படையினருக்கு முகாம் அமைப்பதற்காக பல மாதங்களுக்கு முன்னர் மாற்றுக் காணி வழங்கப்பட்டதோடு, குறித்த பாடசாலையிலிருந்து விலகிக் கொள்வதற்காக கால அவகாசமும் வழங்கப்பட்டது.

ஆனால், கடற்படையினர் பாடசாலையை விட்டு வெளியேறாது தொடர்ந்தும்  அங்கேயே நிலைகொண்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .