2025 ஜூலை 09, புதன்கிழமை

அரச காணிகளை பலவந்தமாக கைப்பற்றுவர்களுக்கு எதிராக நடவடிக்கை:திருமலையில் ஜனாதிபதி

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 04 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எல்.தேவ்.)

அரச காணிகளை அபிவிருத்தித் திட்டங்களுக்கு பயன்படுத்த முடியாத வகையில் பலவந்தமாகக் கைப்பற்றுபவர்களுக்கெதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப்படும். அரச காணிகளைக் கைப்பற்றுவதால் சட்டரீதியாக காணிகள் வழங்க வேண்டியவர்களுக்கு காணி வழங்கமுடியாதுள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திருமலையில் தெரிவித்தார்.

திருகோணமலை கடற்படைத்தள கேட்போர் கூடத்தில் இன்று  காலை மலர்கின்ற கிழக்கின் புதியதோர் உதயம் என்ற தலைப்பில் நடைபெற்ற ஜனாதிபதியின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்

தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாகாணம்,  மாவட்டம் என்ற வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் இந்த நாட்டு மக்கள். ஒரே நாடு ஒரே மக்கள் என்ற வகையில் செயற்பட்டு நாட்டை முன்னேற்றப் பாதையில் வழிநடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

கிழக்கு மாகாணத்திற்கே அதிகமான நிதிகள் அபிவிருத்தி மற்றும் ஏனைய செயற்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. பிரதானமாக வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, பாலங்கள் அமைத்தல், கல்வி சுகாதாரம் உள்ளிட்ட திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த மாகாணம் தமிழ், முஸ்லிம், சிங்களம் ஆகிய மூன்று இனங்களும் வாழும் மகிழ்ச்சியான பிரதேசமாகும். பல திணைக்களங்களில் உள்ள அதிகாரிகள் சிங்களம் பேசுபவர்களாக இருப்பதனாலும், அவர்களுக்குத் தமிழ் தெரியாததாலும் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அது போலவே தமிழ் தெரிந்தவர்களுக்கும் அதனால் தமிழ் தெரிந்தவர்கள் சிங்களத்தையும், சிங்களம் தெரிந்தவர்கள் தமிழையும் கற்றுக்கொள்ள முயற்சியுங்கள். அவ்வாறு செயற்பட்டால் இன்னமும் நல்லமுறையில் வேலைகளைச் செய்யமுடியும்.

அரச அதிகாரிகள் சட்டவிரோதமான முறையில் குடியேறுவதற்கு இடமளிக்காது சட்டத்தைக் கடைப்பிடியுங்கள். கிழக்கு மாகாணத்திலுள்ள குறைபாடுகளைத் தீர்ப்பதற்கு அரச அதிகாரிகள் மூலமாக ஆவன செய்வேன் என்றார்.

கிழக்கு மாகாணத்தில் 2005ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராயப்பட்ட மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் முன்வைத்த சுகாதார, மற்றும் காணி வீதி, வீடமைப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி இருக்கும் வளங்களை முழுமையாக பயன்படுத்துங்கள். அதன் பின்னும் இருக்கும் தேவைகள் குறித்து தெரியப்படுத்துங்கள் அவை தீர்த்து வைக்கப்படும் என்றார்.

கிழக்கு மாகாண ஆளுநர் றியல் அட்மிரல் கொஹான் விக்கிரம வரவேற்புரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்கள் தமது மாவட்டங்கள் குறித்த கடந்தகால அபிவிருத்திகள் பற்றியும் எதிர்கால திட்டங்கள் குறித்துமான அறிக்கைகளைச் சமர்ப்பித்தனர்.

இம்மாநாட்டில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர், பிரதி அமைச்சர்கள், கிழக்கு மாகதண முதலமைச்சர், ஆளுநர்,  நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், மாவட்ட அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சித் திணைக்கள அதிகாரிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .