2025 மே 03, சனிக்கிழமை

வட-கிழக்கு எம் தாயகம் என்பதை உறுதிப்படுத்த மாகாண ஆட்சியை த.தே.கூ. கைப்பற்ற வேண்டும்: சம்பந்தன்

Menaka Mookandi   / 2012 ஜூலை 31 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சி.குருநாதன்)

இணைந்த வடக்கு, கிழக்கு தாயகத்தில் தமிழ் பேசும் மக்கள் சொந்த மண்ணில் தம்மைத் தாமே ஆளும் அதிகாரத்தை பெறக்கூடியதான அரசியல் தீர்வு ஒன்றை காண வேண்டும். இதற்காகவும் வடக்கு கிழக்கு தமிழ்ப்பேசும் மக்களின் தாயகம் என்பதை உறுதிப்படுத்தவும் எதிர்வருகின்ற மாகாணசபைத் தேர்தலில் மாகாண ஆட்சியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்ற வேண்டும் என்று அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுக்கின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

மூதூர், மணற்சேனை கிராமத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திலிருந்து போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்து இப்பிரசாரக் கூட்டம் நடத்தப்பட்டது.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய சம்பந்தன் எம்.பி,

'கிழக்கு மாகாணசபை உரிய காலத்திற்கு ஒரு வருட காலம் முன்னதாக கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படுகின்றது. சபையை கலைக்ககூடாது என்று கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் ஒன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. முதலமைச்சரும் அத்தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார். ஆனால் மேலிடம் சொல்லி விட்டது என்பதற்காக அத்தீர்மானம் கைவிடப்பட்டது.

ஆனால் நிறைவேற்றப்படுகின்ற திர்மானத்தை நடைமுறைப்படுத்தக்கூடிய உறுதிமிக்க தலைமைத்துவம் தான் கிழக்கு மாகாண சபைக்கு தேவைப்படுகின்றது. காணி, பொலிஸ் மற்றும் சட்டம் - ஒழுங்கு பேணும் அதிகாரங்கள் வேண்டும் என்று வாதாடி பெற்றுக்கொள்ளக்கூடிய முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் தான் கிழக்கு மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட வேண்டும்' என்றார்.

இக்கூட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்னசிங்கம், திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் சி.தண்டாயுதபாணி மற்றும் வேட்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X