2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

எமது போராட்டம் வேறொரு வடிவத்தை எடுத்துள்ளது: வேட்பாளர் சிங்காரவேல் தண்டாயுதபாணி

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 05 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரமன்)


'நீர்கொழும்பைப் பாருங்கள். அது ஒரு காலத்தில் தமிழ்ப் பிரதேசமாக இருந்தது. ஆனால் தற்போது எப்படி நிலை மாறி உள்ளது. காலம் செல்லச்செல்ல இவ்வாறான நிலைமையே திருகோணமலைக்கும் ஏற்படலாம். இதற்கு நாம் அனுமதிக்கமுடியுமா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  திருகோணமலை மாவட்ட முதன்மை  வேட்பாளர் சிங்காரவேல் தண்டாயுதபாணி தெரிவித்தார்.  

திருகோணமலையில் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்  உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'அபிவிருத்தி தேவை,  உரிமை தேவை இல்லை என்ற சாரப்பட சிலர் தற்போது பேசத் தொடங்கியுள்ளனர். அபிவிருத்தியின் உண்மையான கருத்து மக்கள் அதனை சுதந்திரமாக அனுபவிக்க வேண்டும் என்பதே. எனவே அபிவிருத்தியைக் காட்டி உரிமையை பறித்துவிட இடம்கொடுக்கஹமுடியாது.

மாகாணசபை அதிகாரப்பரவலாக்கத்தின் ஒரு அலகு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. மாகாணசபை முறைமை தமிழ் இளைஞர்களின் போரட்டத்தால் விளைந்த ஒன்று. எந்த அரசாங்கமும் இதனை இலேசாகத் தந்துவிடவில்லை. மாகாணசபைக்கு அதிகாரம் போதாது என்பது ஒரு விடயம். ஆனால் அங்கு அதிகாரம் ஏதும் இல்லை என்று கூறிவிடமுடியாது.

இந்த நாட்டின் முஸ்லிம் மக்கள் எங்களைப் போலவே பாதிக்கப்பட்ட ஒரு இனம். நியாயமான பல பாதிப்புக்கள் இன்று மட்டுமல்ல பன்னெடுங்காலமாக அவர்களுக்கு இருந்து வந்துள்ளது.

சம்பூர் மக்கள் இன்னும் சொந்த இடத்திற்கு அவர்களது மண்ணிற்கு போகமுடியாதவர்களாக இப்போதும் உள்ளனர். அவர்களது நிவாரணத்தை நிறுத்தி அந்த மக்களின் பசியை இந்த அரசாங்கம் அரசியலாக்கப் பார்க்கின்றது.

எமது போராட்டம் இப்போது வேறு ஒரு வடிவத்தை எடுத்துள்ளது. அது இராஐதந்திர போராட்டமாக, அறிவுசார்ந்த போரட்டமாக, சர்வதேச மேசைகளில் அலசப்படும் விடயமாக இப்போது மாறியுள்ளது.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது தமிழ் மக்கள் பட்ட அவலங்களை அப்போது சர்வதேசம் கவனத்தில் கொள்ளவில்லை. ஐ.நா.சபையும் கவனிக்கவில்லை. ஆனால், இன்று ந்ஐனீவாவில் எங்கள் பிரச்சினையை அமெரிக்கா பேசும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வெளியில் இலங்கை அரசாங்கம் வீறாப்பாக பேசினாலும் சர்வதேசம் இப்போது இலங்கை அரசாங்கத்தை கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாக்கிவருவது மறைக்கமுடியாத ஒன்று.

கிழக்கின் தேர்தலில் தாங்கள் வெற்றிபெற்றால் சர்வதேசத்தின் முன் தமிழர்கள் தெரிவித்துவரும் செய்தியின் வீரியத்தை குறைத்துவிடலாம் என்று அரசாங்கம் எண்ணியுள்ளது. அதற்கு நாம் அவர்களை அனுமதிக்கக்கூடாது.

சர்வதேசத்தின் மேசைகளில் வைக்கப்பட்டுள்ள நமது பிரச்சினைகள் தொடர்ந்து பேசப்பட, இறுதிமுடிவை நோக்கி நகர்த்தப்படவேண்டியது காலத்தின் கட்டாயம். எனவே இந்தத் தேர்தலில் தெளிவான செய்தியை சர்வதேசத்திற்கு கூறவேண்டியது நமது கடமையாகும்.
எல்லாவற்றிற்கும் எப்போதும் தலைசாய்ந்து போனால் எமது எதிர்காலம் சூனியமாகிவிடும்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .