2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இலவசக் கல்வியை இல்லாதொழிக்க அரசு திட்டமிட்டுச் செயற்படுகிறது: ரணில்

A.P.Mathan   / 2012 செப்டெம்பர் 01 , மு.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்)


இந்த நாட்டிற்கு இலவச கல்வியை நாங்கள்தான் வழங்கினோம். ஆனால் இந்த அரசாங்கம் இலவசக் கல்வியை இல்லாதொழிக்க திட்டமிட்டுச் செயற்படுகிறது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மூதூர் பொது மைதானத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

''இன்று அரசாங்கத்தினால் ஒரு பரீட்சையைக் கூட முறையாக நடத்த முடியவில்லை. அண்மையில் நடத்திய புலமைப்பரிசில் பரீட்சைக்கான வினாப் பத்திரம் பரீட்சைக்கு முன்பே வெளியாகிவிட்டது. அதேபோல் நடைபெற்ற சாதாரணதர, உயர்தர பரீட்சைகளிலும் பிரச்சினைகள் எழுந்துள்ளன. 'இஸட் ஸ்கோர்' பிரச்சினை இன்னும் முடிந்தபாடில்லை.

அரசாங்கம் பல்கலைக் கழகங்களை இழுத்து மூடியுள்ளது. மாணவர்களும் விரிவுரையாளர்களும் வீதியில் இறங்கி உரிமைக்காக போராடுகின்றனர். கூடுதலான பணத்தை செலவு செய்யவேண்டிய கல்விக்கு மிகக்குறைந்தளவு பணத்தையே அரசாங்கம் செலவிடுகிறது.

முறையான அபிவிருத்தித் திட்டங்கள் எதனையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. சமூர்த்தி திட்டத்தையும் இல்லாமற் செய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. இம்முறை வெற்றிலைக்கு வாக்களித்தால் சமூர்த்தித்திட்டமும் இல்லாமற் போய்விடும்.

இன்று மக்கள் சுதந்திரமாக வியாபாரத்தையோ மீன்பிடித் தொழிலையோ செய்ய முடியாதவர்களாக உள்ளனர். இப்பகுதியில் கைவிடப்பட்ட வயல் நிலங்களில் வீடுகள் அமைப்பதற்கு கூட தடை விதித்துள்ளனர்.

எனவே, முஸ்லிம்களின் சமய கலாசார உரிமைகளைப் பாதுகாப்பதற்கு, இலவச கல்வியை தொடர்ந்து காப்பதற்கு, தத்தமது தொழில்கள் விருத்தியடைவதற்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்குமாறு கேட்கின்றேன். ஆட்சியை மாற்றுவதற்கான முன்னெடுப்பாக இம்மாகாண சபைத் தேர்தல் அமையப் போகிறது என்பதையும் கூறிக்கொள்கின்றேன்'' என்றார்.

இக்கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.




  Comments - 0

  • rima Saturday, 01 September 2012 06:16 PM

    தலைவா வாழ்க உங்களை போன்ற ஓர் நல்ல மனிதருக்கு இந்த நாட்டில் இடம் இல்லை. மூன்று மதமும் சம்மதம் என்று சொல்லகூடிய ஓர் தலைவர் நீங்கள் வாழ்க வாழ்க வாழ்க.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .