2025 மே 07, புதன்கிழமை

முஸ்லிம்களுக்கு எதிர்காலத்தில் சுயாட்சி ஒழுங்குகள் ஏற்படுத்தப்படல் வேண்டும்: சம்பந்தன்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 05 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                  (ரமன்)
'முஸ்லிம் மக்கள் தனித்துவமிக்க ஒரு இனத்தவர், எதிர்காலத்தில் அவர்களுக்கும் சுயாட்சி ஒழுங்குகள் ஏற்படுத்தப்படல் வேண்டும' என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறினார்.

திருகோணமலையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடரந்தும் உரையாற்றிய அவர்,

'முஸ்லிம் மக்களின் தீர்வுகள் குறித்து முஸ்லிம் தரப்புத்தலைவர்களும் நாங்களும் இணைந்து பேசி இரு தரப்பும் இணைந்து அவர்களின் சுயாட்சிக்கு வழிவகுக்க வேண்டும்.

1949 இல் தந்தை செல்வநாயகம் தமிழர்களுக்காக மட்டும் தனது உரிமைப் போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை. மாறாக தமிழ்ப்பேசும் இனங்களாகிய தமிழ், முஸ்லிம் இனங்களுக்காகத்தான் போராட்டத்தை ஆரம்பித்தார்.

முதன்முறையாக குறிப்பிட்ட சர்வதேச பிரகடனத் தீர்மானத்தின் அடிப்படையில், சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையின் கீழ் தீர்விற்கான கருமங்கள் தற்போது நடைபெற்று வருகின்றது. அடுத்த சில தினங்களில் இது தொடர்பில் சர்வதேச பிரதிநிதிகள் இலங்கைக்கு வரவுள்ளனர். 

இது ஒரு முக்கியமான தேர்தல். தற்போது நாடாளுமன்றத் தேர்தலிலும் பார்க்க இத்தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது மாகாணத்திற்கான தேர்தல். இங்கு வாழும் மக்களுக்கான தேர்தல். இந்த மாகாணம் எப்படி நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதை இங்கு வாழும் மக்கள் தீர்மானிக்க உள்ள தேர்தல். 

தனியாக பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை நாம் விசேட ஒரு அலகாகக்கூட ஏற்றுக்கொள்ளவில்லை. 1987 இல் வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்ட ஒரே அலகாக உருவாக்கப்பட்டது. இவ்வாறான ஒரு இணைப்பிற்காக அப்போது நாம் பல பிரயத்தனங்களை செய்ய வேண்டியிருந்தது. 18 வருடங்கள் இணைப்பு தொடர்ந்தது. அந்த 18 வருடங்களும் இலங்கை நாடாளுமன்றம் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு தொடந்து நிதி ஒதுக்கீட்டை வழங்கி வந்தது. இதனையாரும் மறந்து இருக்கமுடியாது. ஆனால் 18 வருடங்களின் பின் வழக்கொன்றின் அடிப்படையில் இணைப்புப் பிரிக்கப்பட்டது. அப்போதும் அந்த  பிரிப்பை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. எப்போதும் அதனை நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

கடந்த 4 வருடங்கள் இயங்கிய கிழக்கு மாகாணசபை ஒழுங்கான முறையில் இயங்கவில்லை. அரசாங்கத்தின் கைப்பொம்மையாக செயற்பட்டு, மத்திய அரசின் தேவைகளை நிறைவேற்றிக்கொண்டிருந்தது. எனவே இப்போது கிழக்கையும், இனி நடைபெறப்போகின்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலையும் நிச்சயம் நாம் கைப்பற்ற வேண்டியது கட்டாயமானதாகும்.
அரசாங்கத்தின் கணிப்பீடுகளின் படியும், அவர்களது உளவுத்துறை தகவல்களின்படியும் தமிழ் தேசிய  கூட்டமைப்பினராகிய நாம் நடைபெறவுள்ள தேர்தலில் முண்னணியில் உள்ளோம் என்று அரசாங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை நம்பிக்கொண்டு நாம் அமைதியாக இருந்து விடமுடியாது. எனவே எமது வாக்களிப்பு வீதத்தை 80 வீதமாக அதிகரிக்க வேண்டும். அதன் மூலம் மாகாணத்தில் முதன்மை இடத்தைப்பெற்றுக்கொள்ள முடியும்.

நாம் கிழக்கை கைப்பற்றினால் உள்நாட்டிற்கும், சர்வதேசத்திற்கும் தெளிவான ஒரு செய்தியை கூறமுடியும். அது என்னவெனில் இப்போது போரில்லை. மிதவாத தமிழ் தலைவர்கள் தீர்வுகளுக்கு தயாராக இருக்கின்றார்கள். தீர்வுகளை அவர்கள் ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கின்றார்கள் என்பதே. எனவே எமது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ள எமது மக்கள் வாக்களிப்பார்கள் என்பது எமது நம்பிக்கையாக உள்ளது.

இலங்கை தொடர்பில் சர்வதேசத்தின் தீர்மானங்கள் இலகுவில் மறைந்துவிடாது. பிரச்சனைக்கான தீர்வு வரும் வரை அது தொடரும். உலகின் பல்வேறுபட்ட நாடுகளிலும் இவ்வாறான சர்வதேசத்தின் தீர்மானங்களின் அடிப்படையில் கருமங்கள் நடந்து வருகின்றது.

ஒரு முறையான அரசியல் தீர்வு வரும்போது மாகாணசபை பலமான ஆட்சியாக மாறும் சந்தர்ப்பம் உள்ளது. மாகாணசபையை தொடர்ந்தும் மத்திய அரசு தனது கைப்பொம்மையாக பயன்படுத்த அனுமதிக்க கூடாது. இந்ந மாகாணசபை எமக்குரியது அல்ல. அது எங்களுக்குரியது' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X