2025 மே 14, புதன்கிழமை

‘உத்தியோகத்தர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை நிவர்த்திக்கவும்’

Editorial   / 2017 ஜூலை 25 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், அப்துல்சலாம் யாசீம்

இலங்கை திட்டமிடல் சேவை உத்தியோகத்தர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை நிவர்த்தி செய்யுமாறு, கிழக்கு மாகாண திட்டமிடல் உத்தியோகத்தர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, அச்சங்கம் திங்கட்கிழமை (24)  அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”இலங்கை திட்டமிடல் சேவை ​ Iஆம் வகுப்புக்காக அனுமதிக்கப்பட்ட ஆளணி எண்ணிக்கை 141 ஆகக் காணப்படும் போதிலும், தற்போது 172 உத்தியோகத்தர்களே சேவையில் உள்ளனர்.

"இவர்களில் 31 பேருக்கு உரிய பதவிகள் வழங்கப்படாத காரணத்தால், அவர்கள் திட்டமிடல் சேவை ​IIIஆம் வகுப்புப் பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

"இதேவேளை, இலங்கை நிர்வாக சேவையின் Iஆம் வகுப்புக்காக மேலதிகமான பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆகையால், நிர்வாக சேவையில் Iஆம் வகுப்பு உத்தியோகத்தர்களுக்குப் பற்றாக்குறை நிலவுகின்றது.  

"இதனால், நிர்வாக சேவையின் IIIஆம் வகுப்பு உத்தியோகத்தர்கள் பலர், Iஆம் வகுப்புப் பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். அதாவது, இலங்கை திட்டமிடல் சேவை Iஆம் வகுப்பு உத்தியோகத்தர்களுக்கு பதவி இல்லாததால், அவர்கள் கீழ் நிலையிலுள்ள ​IIIஆம் வகுப்புப் பதவிகளை வகித்து வருகின்றனர்.

அதேவேளை, நிர்வாக சேவையின் Iஆம் வகுப்பில் ஆளணி இல்லாமல்  அதிக பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளதால், அச்சேவையின் IIIஆம் வகுப்பு உத்தியோகத்தர்கள், Iஆம் வகுப்புப் பதவிகளை வகித்து வருகின்றனர்.

"இந்த இரண்டு சேவைகளும்  நாடளாவிய சேவைகள் என்று குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், இரண்டு சேவைகளுக்குமான ஆளணி விடயத்தில் பாரிய இடைவெளி காணப்படுகின்றது.

"இது, திட்டமிடல் சேவை உத்தியோகத்தர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள பாரிய அநீதியாக இருப்பதோடு, இலங்கை அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சமத்துவ உரிமைகளை மீறும் செயலாகவும் உள்ளது.

"எனவே, தயவுசெய்து இந்த விடயங்களை தங்களது மேலான கவனத்துக்கு எடுத்து, திட்டமிடல் சேவை உத்தியோகத்தர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள இந்த அநீதியைப் போக்க ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .