2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

குச்சவெளியிலுள்ள கடற்படை முகாம்கள் இரண்டை இடமாற்ற நடவடிக்கை

Princiya Dixci   / 2016 ஜூன் 06 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கடற்படை முகாம்கள் இரண்டை இடமாற்றம் செய்வது தொடர்பான கடிதங்கள், மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பக்குமாரவினால், திருகோணமலை மாவட்ட கடற்படை கட்டளைத் தளபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன், இன்று திங்கட்கிழமை (06) தெரிவித்தார்.

மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, கடந்த வெள்ளிக்கிழமையன்று, தளபதியிடம் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தமக்கும் ஒரு பிரதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

'குச்சவெளிப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கோபாலபுரம் கடற்கரை வீதியை மறித்து அமைக்கப்பட்டுள்ள கடற்படை முகாம், நீண்ட காலமாக அவ்விடத்திலேயே காணப்படுகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள நல்லாட்சியின் பின்னர், பல பிரதேசங்களில் இவ்வாறு இருந்த முகாம்கள் அகற்றபடுகின்ற நிலையில், இந்த வீதி திறக்கப்படாமல் காணப்படுகிறது.

அதுமட்டுமின்றி, கும்புறுப்பிட்டி காந்திநகரில், மீனவப் படகுகள் தரித்து வைக்கும் கடற்கரைப்பகுதியில், கடற்படையினரின் சிறிய முகாம் அமைக்கப்பட்டள்ளது. அதனால் அப்பகுதி மீனவர்களுக்கு தமது மீன் பிடிப்படகுகளை அவ்விடத்தில் தறித்து வைக்க முடியாதுள்ளதுடன், சுதந்திரமாக அப்பகுதிக்குச் செல்லவும் முடியாதுள்ளது.

எனவே, குடியிருப்புப் பகுதியில் புதிதாக அமைத்துள்ள கடற்படை முகாமை அவ்விடத்தில் இருந்து அகற்றி வேறு இடத்தில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, அவ்விடத்துக்கு சென்று சம்மந்தப்பட்ட முகாம்களின் அதிகாரிகளுடன் கலந்துரையாடினோம்.

அடிப்படையில், கடந்த மே மாதம் 30ஆம் திகதி திருகோணமலை கச்சேரியில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், நான் எழுத்து மூலமாக கோரியமைக்கு அமைய, எதிர்க்கட்சித்தலைவரும் ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவருமான இரா.சம்பந்தன், மாவட்ட செயலாளருக்கு இவ்விடயம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பணித்திருந்தார்' என அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X