Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2016 ஏப்ரல் 25 , மு.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடமலை ராஜ்குமார்
தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நேர்முகப் பரீட்சைக்குரிய திகதியை உடனடியாக அறிவிக்குமாறு கோரி கிழக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர் சம்மேளனம் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று திங்கட்கிழமை ஆரம்பித்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்திலுள்ள கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் அலுவகத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கான நேர்முகப் பரீட்சைக்குரிய திகதியை அறிவிக்கும்வரை இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடருமென்பதுடன், இதற்குச் சரியான பதில் கிடைக்காத பட்சத்தில் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை தாம் முன்னெடுக்கவுள்ளதாகவும் தொண்டர் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
கிழக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர் சம்மேளனத்தில் திருகோணமலையைச் சேர்ந்த 250 உறுப்பினர்களும் மட்டக்களப்பைச் சேர்ந்த 100 உறுப்பினர்களும் அம்பாறையைச் சேர்ந்த 115 உறுப்பினர்களுமாக மொத்தம் 465 பேர் அங்கம் வகிக்கின்றனர்.
மேலும், மேற்படி சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையில், 'யுத்தம் மற்றும் சுனாமி இடம்பெற்ற கஷ்டமான காலப்பகுதியில் சேவையாற்றிய கிழக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் கிடைக்காமை அவர்களுக்கு ஏமாற்றத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளன' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'கிழக்கு மாகாண ஆளுநரிடம் இரண்டு தடவைகளுக்கு மேல் எங்களின் நியமனத்தை உறுதிப்படுத்துமாறு எழுத்து மூலம் கோரியிருந்தோம். அதற்கு அவர் மத்திய அரசிடம் அனுமதி கோரி நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார். ஆனால், இதுவரையில் எதுவித நடவடிக்கையும் அவர் எடுத்ததாக தெரியவில்லை' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .