2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

கட்டாக்காலி நாய்களுக்கு சரணாலயம்

Editorial   / 2019 டிசெம்பர் 29 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார், அ.அச்சுதன்

திருகோணமலை நகராட்சி மன்றப் பகுதியில், கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் பலர் விசர்நாய்க் கடிக்கு உள்ளாவதுடன் வீதிப் போக்குவரத்து இடையூறு, விபத்துகள் ஏற்படுத்தப்படுவதாகவும், திருகோணமலை நகர சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இதனைக் கருத்திற்கொண்டு, கட்டாக்காலி நாய்களுக்கென ஒரு சரணாலயம் அமைப்பதற்கு நகர சபையால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, திருகோணமலை நகர சபையின் தலைவர் நா.ராஜநாயகம் தெரிவித்தார்.

இதற்கென பிரதேச செயலாளர் அலுவலகத்தால் காணித் துண்டொன்றை ஒதுக்கிக் தருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த நாய்களைப் பராமரிப்பதற்குத் தேவையான மருத்துவ வசதி, அவற்றுக்கான கருத்தடை,  விசர்நாய் தடுப்பூசி போன்றவற்றை திருகோணமலை கால்நடை வைத்திய அதிகாரியின் உதவியுடன் பெறக்கூடியதாக உள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

பிடிக்கப்படும் நாய்கள் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஓர் இடத்தில் குட்டி நாய்களை வளர்ப்பதற்கும், இரண்டாவது இடத்தில் வளர்ந்த நாய்களையும், மூன்றாவது இடத்தில் குட்டை, சொறி, பெரிய காயங்களுடன் அவதிப்படும் நாய்களை வளர்க்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இம்முயற்சி, பாரிய சவால்களைக்கொண்டதெனவும் இவற்றுக்கு ஹொட்டல்களில் மீதமாக ஒதுக்கப்படுகின்ற உணவுகளைச் சேகரித்து வழங்கவும் நீர்த்தாங்கி மூலம் குடிநீர் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் நகர சபையின் தலைவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், நகராட்சிமன்றம் தனியாக இவ்வேலையைச் செய்வது கடினமானதாக உணரப்படுவதால் இத்திட்டத்துக்குப் பங்களிப்புச் செய்ய விரும்புவோர், நகராட்சிமன்றத்துடன் தொடர்புகொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .