2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

கிண்ணியாவுக்கு புதிய வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனம்

Editorial   / 2020 ஓகஸ்ட் 17 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்

“கல்வி வளர்ச்சியில், தேசிய மட்டத்தில் கடைநிலையில் இருக்கின்ற கிண்ணியாவின்  கல்வி  மேம்பாட்டுக்காக  தேவையான  அனைத்துப் பங்களிப்பையும் வழங்குவேன்”  என கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்தின் புதிய வலயக் கல்வி  பணிப்பாளராக, இன்று (17) கடமையைப் பொறுப்பேற்றுக்கொண்ட ஏ .நசூகர்கான் தெரிவித்தார்

கிண்ணியா வலயக் கல்வி அலுவலகமும் கிண்ணியா அதிபர்கள் சங்கமும் இணைந்து புதிய பணிப்பாளருக்காக  ஏற்பாடு செய்த  வரவேற்பு வைபவத்தில் கலந்தகொண்டு உரையாற்றுகையிலே அவர்  இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்,  “கல்வி அபிவிருத்திக்குத் தேவையான  வளங்களையும் கிண்ணியா வலயக் கல்வி அலுவலகம் பெற்றிருக்கின்றது. இந்நிலையில், எதிர்காலத்தில் இப் பிரதேசத்தின் கல்வி மேம்பாட்டை ஏற்படுத்துவதற்கு திட்டமிடலும் வழிகாட்டலும்  கூட்டுப் பொறுப்புமே அவசியம் தேவையாக இருக்கின்றன. 

“கல்வித்துறை ஒரு அரச சேவையாகும். அரச சேவையில் உள்வாங்கப்படுகின்ற  எல்லோரும் அரச சுற்றறிக்கைக்கு ஏற்ப கடமைகளைச் செய்யும் போது,  ஊழலும் இலஞ்சமும் அந்த நிறுவனத்தில் இடம்பெற முடியாது.

“இதற்கு முன்பு இருந்த சகலவிதமான நிர்வாக குறைபாடுகளையும் கசப்பான அனுபவங்களை நாம் இன்றிலிருந்து மறந்துவிட்டு, புதியதொரு பாதையில் பயணிப்பதற்கு நாம் அனைவரும் தியாகம் செய்ய வேண்டும்.

“மாணவர்கள் எல்லோரும் எதிர்காலத்தில் சிறந்த பிரஜையாக உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு உருவாக்கப்படும் போது தான் எங்களுக்கு ஆத்ம திருப்தி ஏற்பட முடியும்.

“இங்குள்ள ஆசிரியர்கள் அதிபர்கள் இரத்தினக் கற்களுக்கு சமமானவர்கள். அவர்களிடம் பலவிதமான திறமைகள் இருக்கின்றன. உங்களில்  யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது. எப்போதும் ஆசிரியர்கள், அதிபர்கள் ஆகியோரின் திறமைகள்  மதிக்கப்பட வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் தேசிய ரீதியில் இந்தக் கல்வி வலயத்தை முன்னேற்ற முடியும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X