2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

பத்தேகமவுக்கு நிவாரண, சிரமதான உதவிகள்

Editorial   / 2017 ஜூன் 05 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இக்பால் அலி

காலி, பத்தேகமப் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பணியில், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் மற்றும் சிவன் அறக்கட்டளை நிறுவனம் இணைந்து நிவாரண உதவிகளையும் சிரமதானப் பணிகளையும் மேற்கொண்டது.

இதில் சிரமதானப் பணிகளுக்காக வடக்கில் இருந்து வந்த கரவெட்டியைச் சேர்ந்த 45 பேரைக் கொண்ட இளைஞர்  குழு மற்றும் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் 40 பேர் என 85 க்கும் மேற்பட்டோர் இணைந்து, இந்த நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர்.

இந்தப் நிவாரணப் பணிகளில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சபை உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளருமான எம். கே. சிவாஜிலிங்கம், சிவன் அறக்கட்டளையின் நிறுவுனரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் கொள்கை பரப்புச் செயலாளருமான கணேஸ் வேலாயுதம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தென் மாகாணசபை உறுப்பினருமான  வண. பத்தேகம சுமித்திர தேரர் ஆகியோர் கலந்துகொண்டனர்,

இங்கு பல வீடுகள் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தன இருந்த போதிலும் இரு வீடுகளுக்கு மாத்திரமே தற்காலிகக் கூடாரங்கள் வழங்கப்பட்டிருந்தன.

இது தொடர்பாக உரியவர்களை தொடர்புகொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் உறுதியளித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக வண. பத்தேகம சுமித்திர தேரரிடம், சிவன் அறக்கட்டளையின் சார்பில் மூன்று இலட்சம் பெறுமதியான காசோலையும் வழங்கப்பட்டது.

அத்துடன், களுத்துறை மாவட்டத்தில் உள்ள புளத்சிங்கள பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு, சிவன் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட 400 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப்பொதிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X