2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

’’வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து கவனம் செலுத்த உள்ளோம்’’

Janu   / 2024 பெப்ரவரி 08 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் பங்காளர் அமைப்பான AHRC நிறுவன பிரதிநிதிகளுக்கும் தேசிய மக்கள் சக்தியின் அரசியல் பிரமுகர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் திருகோணமலையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் திங்கட்கிழமை (05) இடம்பெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு தமிழ் மக்களின் நிரந்தர அரசியல் தீர்வு தொடர்பாகவும், வலிந்து  காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கான தீர்வு தொடர்பாகவும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில், "எமது ஆட்சியில் இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் வேறுபாடு இன்றி சம உரிமையுடன் நடத்தப்படுவார்கள். இவ்வாறான நிலையிலும் தனியாக பிரிந்து செல்ல வேண்டும் என தமிழ் மக்கள் கோருவார்களாக இருந்தால் அதை நடைமுறைப் படுத்துவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை அது அவர்களுடைய உரிமையாகும்" என மக்கள் விடுதலை முன்னனியின் முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹதுன்னெத்தி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"எங்களுடைய ஆட்சியில் மக்களிடையே இன ரீதியான, மத ரீதியான, வகுப்பு ரீதியான, சாதி ரீதியான, பொருளாதார ரீதியான எந்த ஏற்றத் தாழ்வுகளும் காணப்படாது அனைவரும் சமமாகவே நடத்தப்படுவார்கள். அனைவருக்கும் அனைத்தும் சமமாகவே பகிரப்படும் இவ்வாறான நிலையிலும் தமிழ் மக்கள் தனியாக பிரிந்து வாழ நினைப்பார்களாக இருந்தால் அதை நடைமுறைப் படுத்துவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை அதேபோல் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களும் அவ்வாறு நினைப்பார்களாக இருந்தால் அதை வழங்குவதிலும் எந்த ஆட்சேபனையும் இல்லை எனினும் எமது ஆட்சியில் மக்கள் அவ்வாறான மன நிலைக்கு தள்ளப்பட மாட்டார்கள்.

காணாமல் ஆக்கப்பட்ட படுகொலை செய்யப்பட்ட இந்த பிரச்சினை தமிழ் மக்களுக்கு மாத்திரமான பிரச்சினை இல்லை. இந்தப்பிரச்சினை எங்களுக்கும் இருக்கின்றது. 2021 மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் உட்பட ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் காணாமலாக்கப்பட்டும், படுகொலை செய்யப்பட்டும் உள்ளார்கள். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இன்னும் இறப்புச் சான்றிதழ்கூட கிடைக்கவில்லை. இது ஒரு பாரிய பிரச்சினை, யுத்தம் முடிந்த கையோடு, ஆட்சியில் இருந்த அரசாங்கத்திற்கு சொன்னோம். இதனை தொடர்ந்து கொண்டு செல்லக்கூடாது தீர்வை வழங்கச் சொல்லி, அதுமட்டுமல்லாமல் காணாமல் போன தங்கம் போன்ற சொத்துக்களுக்கு என்ன நடந்தது என கூற வேண்டும். இதுபோன்ற காணாமல் போனவற்றை தேடிக் கொடுக்க வேண்டியதும் அதற்கான தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டியதும் எமது பொறுப்பாகும். எனவே, பாதிக்கப்பட்ட குழுக்களையும் கருத்தில் வைத்துக் கொண்டு எதிர்காலத்தில் அதற்கான திட்டங்களை வகுக்க உள்ளோம்"  என  தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X