2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

ஹம்பாந்தோட்டை மக்களின் நிலைமை தொடர்பில் ஆராய்வு

Editorial   / 2017 ஜூன் 06 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனர்த்தங்களால் சீர்குலைந்த ஹம்பாந்தோட்டை மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கான திட்டம் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல்,  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலகத்தில் இன்று (06) பிற்பகல் இடம்பெற்றது.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில், அனர்த்தங்களுக்குள்ளான வீடுகளை மீள நிர்மாணித்தல், அழிவுற்ற வீதிகள், பாடசாலைகள், நீர்ப்பாசனக் கட்டமைப்புகள் புனரமைத்தல் மற்றும் பயிர்நிலங்களை இயல்பு நிலைக்கு கொண்டுவருதல் போன்றவற்றுக்காக முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில், அலுவலர்களிடம் வினவிய ஜனாதிபதி, அச்செயற்பாடுகளைத் துரிதப்படுத்தி, முறையாக முன்னெடுக்குமாறு தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட வீதிகள் மற்றும் பாலங்களைத் திருத்துவதற்கான செலவு மதிப்பீடுகளை விரைவாக வழங்குமாறும் அதற்கான முதற்கட்ட நிதியை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்துடன், பாதிக்கப்பட்ட பயிர்ச்செய்கைகளுக்கான உரம் மற்றும் விதை நெல்லை வழங்குவதற்கு விவசாய அமைச்சின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, நீர்ப்பாசனக் கட்டமைப்புகளை திருத்துவதற்குத் துரித நடவடிக்கை எடுக்குமாறும் கூறினார்.

மண்சரிவு அபாயம் நிலவும் பாதுகாப்பற்ற இடங்களில் குடியிருக்கும் மக்களை அந்த இடங்களிலிருந்து அகற்றி, பாதுகாப்பான வேறு இடங்களில் குடியமர்த்துவதற்கான திட்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன், குறித்த இடங்களிலிருந்து வெளியேற விரும்பாத மக்களை தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

சட்டவிரோத நிர்மாணங்களை அகற்றுவதற்காக பிரதேச அரசியல்வாதிகளின் ஒப்புதலுடன் முறையான திட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X