Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜனவரி 30 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
- மேனகா மூக்காண்டி
நாட்டின் மிக முக்கியமானதும் முன்னேற்றகரமானதுமான அரசமைப்புத் திருத்தங்கள் அனைத்தும், அரசாங்கத்துக்குப் பெரும்பான்மை இல்லாத சந்தர்ப்பத்தில் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவ்வாறான சந்தர்ப்பத்தில் தான், அனைவரது ஒத்துழைப்புடனும், முன்னேற்றகரமான விடயங்கள் நடந்தேறின. ஆகையால், புதிய அரசமைப்பை நிறைவேற்றுவதற்கு, அரசாங்கத்துக்கு பெரும்பான்மை இல்லாதிருப்பது தான் நல்ல சகுனம். இதனால், மிக முன்னேற்றகரமான அரசமைப்பை உருவாக்கக்கூடியதாக இருக்குமென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
தமிழ்மிரருக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார். செவ்வியின் முழு விவரம் வருமாறு,
கே: “நாட்டைப் பிரிக்கிறார் சுமந்திரன்” என்ற குற்றச்சாட்டை, எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்?
இந்தக் குற்றச்சாட்டு, இரண்டு பக்கங்களிலிருந்தும் எழுகிறது. தெற்கில் உள்ளவர்கள், நான் நாட்டைப் பிரிப்பதாகக் குற்றஞ்சாட்டுகிறார்கள். அதேசமயம் தமிழ்த் தரப்பினர், நாட்டைப் பிரிக்கும் கோரிக்கையை நான் கைவிட்டுவிட்டேன் என்று குற்றஞ்சாட்டுகிறார்கள். இவ்வாறு, எந்தவொரு விடயத்துக்கும், நேர்மாறான குற்றச்சாட்டுகள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்த இரு குற்றச்சாட்டுகளும் தவறானவை என்பது தான் என்னுடைய விளக்கம். இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட நடுநிலையில் தான், என்னுடைய நிலைப்பாடு இருக்கிறது. பொதுவாக, நடுநிலைவாதிகளுக்கு ஏற்படக்கூடிய பொதுப் பிரச்சினையாகவே இது காணப்படுகிறது.
கே: கட்சிக்குள், உங்களுக்கான ஆதரவு எந்தளவுக்கு உள்ளது?
கட்சிக்குள், எனக்கு எப்போதுமே ஆதரவு உள்ளது. காரணம், கட்சியோடு கலந்துரையாடாமல், தனியாக நான், எந்தவொரு நிலைப்பாட்டுக்கும் வருவது கிடையாது.
கே: புதிய அரசமைப்பின் அடுத்தகட்டப் பணிகளின் முன்னேற்றம் எவ்வாறுள்ளது?
புதிய அரசமைப்பை உருவாக்கும் பணிகளை, ஒரு வருடத்தில் முடித்திருக்கலாம். 2015 தேர்தல் முடிந்தவுடனேயே, நாங்கள் அதற்கான அழுத்தத்தைப் பிரயோகித்தோம். அரசாங்கமும், அரசமைப்புக்கான கருத்தறியும் குழுவொன்றை நியமித்தது. 2016 ஜனவரியில், புதிய அரசமைப்பை உருவாக்குவதற்காக, அரமைப்புப் பேரவை உருவாக்கப்பட்டது. அதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது. ஆனால், அதிலும் இரண்டு மாதகால தாமதம் ஏற்பட்டு, மார்ச் முதலாம் திகதி தான் நிறைவேற்றப்பட்டது.
நிறைவேறிய உடனேயே, வழிநடத்தல் குழு, உப குழுக்கள் 6, இன்னுமோர் உபகுழு என்ற எல்லாக் குழுக்களினதும் அறிக்கைகள் அந்த வருட இறுதிக்குள்ளேயே தயாரிக்கப்பட்டுவிட்டன. இவை, அவசரத் தயாரிப்பில்லை. அந்த வருடத்தில் நவம்பர் மாதம் வரையில், வழிநடத்தல் குழுவால், 40க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இப்போது வரை, 82 தடவைகள், இக்குழு கூடியுள்ளது. தவிர, ஒவ்வோர் உபகுழுவும், பல கூட்டங்களை நடத்தி, தங்களுடைய அறிக்கைகளை வெளிக்கொண்டு வந்தன.
ஆனால், வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தயாராகும் போது தான், சில அரசியல் கட்சிகள் பின்வாங்கத் தொடங்கின. இதனால், இந்த அறிக்கை தயாரிப்பதில், 2016 நவம்பர் முதல் 2017 செப்டெம்பர் வரையான நீண்ட காலதாமதம் ஏற்பட்டது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியே, இந்தக் காலதாமதத்துக்குப் பிரதான காரணமாக இருந்தது. ஆனால், அறிக்கை வெளிவந்த பின்னர், ஒக்டோபர், நவம்பர் மாதங்களில், அரசமைப்புப் பேரவையில் 6 தடவைகள், அந்த அறிக்கைகள் தொடர்பில் விவாதங்கள் நடந்தன. 5 நாள்கள் இடம்பெற்ற விவாதங்களின் போது, பொது எதிரணியைச் சேர்ந்த இரண்டு பேரைத் தவிர வேறு எவரும், அறிக்கையின் உள்ளடக்கங்களுக்கு எதிராகப் பேசவில்லை. ஆறாவது நாள் விவாதத்தில், எவரும் கலந்துகொண்டிருக்காததால், அது நடைபெறவில்லை. ஆகவே, அந்த இடைக்கால அறிக்கைகள் மற்றும் உபகுழுக்களின் அறிக்கைகள் தொடர்பாகவும், எதிரான விமர்சனங்கள், பெரியளவில் இருந்திருக்கவில்லை.
அடுத்தகட்டமாக, வழிநடத்தல் குழுவானது, இந்த இடைக்கால அறிக்கையையும் உபகுழுக்களின் அறிக்கைகளையும் வைத்துக்கொண்டு, அரசமைப்புக்கான ஒரு நகல் வரைவொன்றைத் தயாரிப்பதாகவே இருந்தது. இதற்காக, வழிநடத்தல் குழுவின் உதவிக்காக, 10 பேரடங்கிய நிபுணர் குழுவொன்றிடம் பொறுப்புக் கையளிக்கப்பட்டிருந்தது. ஒரு வரைவொன்றை எங்களிடம் கையளித்துவிட்டு, அதிலிருந்தே நகல் வரைவைத் தயாரிப்பதற்கான பொறுப்பு கையளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், நிபுணர் குழுவின் இந்தப் பணிகளின் போது, சில தடங்கல்கள் ஏற்பட்டன. அதையும் மீறி, அவர்கள் 10 பேரும் இணைந்து, எம்மிடம் ஒரு வரைவொன்றைக் கையளித்துள்ளார்கள். ஆனால் வழிநடத்தல் குழுவானது, நகலொன்றைத் தயாரிக்காது, நிபுணர் குழு கையளித்த அறிக்கையை வைத்துக்கொண்டு, அதன் உள்ளடக்கங்களுக்கான கருத்துகளை அறிவோம் என்று பரிந்துரை செய்தது. அதை, கடந்த ஓகஸ்ட் மாதத்திலேயே செய்திருக்கலாம். காலதாமதத்தை அடுத்து, இது தொடர்பில், கடந்த ஒக்டோபர் மாதத்தில் இறுதித் தீர்மானமொன்று எடுக்கப்பட்டு, நவம்பரில் வெளியிடுவதாக முடிவெடுக்கப்பட்டது. இருப்பினும், ஒக்டோபர் 26 புரட்சி காரணமாக, அண்மையில் தான் அந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
அந்த அறிக்கையில், நிபுணர்கள் தயாரித்த ஒரு நகல் வரைவொன்று உள்ளடக்கப்பட்டுள்ளது. அந்த வரைவு, 2017 செப்டெம்பரில் வெளிவந்த இடைக்கால அறிக்கை, 6 உபகுழுக்களின் அறிக்கைகள், ஏழாவது குழுவின் அறிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுதான், நிபுணர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது.
இனிவரும் நாள்களில், இந்த அறிக்கையை வைத்து, ஒரு சட்டமூலம் தயாரிக்கப்பட வேண்டும். அந்தச் சட்டமூலத்தை, நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவர வேண்டும். அது தான் நடைமுறை. இப்போது, இந்த வரைவை அடிப்படையாகக் கொண்டு, பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. இடைக்கால அறிக்கை வந்தபோது எழாத விமர்சனங்கள், தற்போது எழுந்துள்ளன. அதனால், இதுபற்றி ஒழுங்கான பேச்சுவார்த்தையொன்று நடத்தப்பட்டு, விளக்கமளிக்கப்பட வேண்டும். அந்த முயற்சி, ஓரளவு தற்போது முன்னெடுக்கப்பட்டும் வருகிறது.
ஆனால், உண்மை என்ன என்பது பற்றி, வரைவின் உள்ளடக்கம் என்னவென்பது பற்றிய தெளிவுபடுத்தல் அவசியம். இன்று விமர்சிப்பவர்களும் இணங்கியதால் தான், அரசமைப்புக்கான வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. நாட்டைப் பிரிக்கும் வகையிலான உள்ளடக்கங்கள் இதில் இல்லை. மறுபுறம், ஆட்சி முறைமை பற்றி, இந்த வரைவில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, ஆட்சியை வர்ணிக்கும் சொற்கள் இதில் இல்லை. அதனால், இரு புறத்தையும் சமாளித்துக்கொண்டு, இந்த வரைவைத் தயாரிப்பது, பெரும் சவாலுக்குரிய விடயமாக இன்று மாறியுள்ளது. ஆனால், இதுபற்றி தெளிவுபடுத்தத் தெளிவுபடுத்த, நாட்டுக்குள்ளேயும் மக்களுக்கிடையேயும், விளக்கத்தை ஏற்படுத்த முடியும். அவ்வாறு தெளிவு ஏற்படும் போது, ஒரு சட்டமூலத்தைத் தயாரிக்க முடியும்.
கே: இந்தத் தெளிவுபடுத்தலுக்கு, அரசாங்கத் தரப்பிலிருந்து எவ்வித ஒத்துழைப்பும் இல்லையல்லவா?
கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன, இது குறித்த தெளிவுபடுத்தல்களை முன்னெடுத்து வருகிறார். ஆனால், அரசாங்கத் தரப்பிலிருந்து ஒத்துழைப்பு குறைவாகத்தான் இருக்கிறது. இவ்விடயத்தில் மும்முரமாக ஈடுபட்ட ஜே.வி.பி கூட, தற்போது பின்வாங்கியுள்ளது. எதிர்வரும் தேர்தல்களை இலக்கு வைத்தே, அனைத்துத் தரப்பினரும், பின்வாங்க ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பில், அரசாங்கத்துடன் நாம் பேசியிருக்கிறோம்.
எவ்வாறாயினும், தேர்தல் பயத்தில், அரசியல்வாதிகள் என்னென்ன சொல்கிறார்கள் என்று கவனிக்காமல், எழுத்தில் இருக்கும் இந்த வரைவை வாசித்துப் பார்ப்பார்களேயானால், தெளிவு வரும்.
இது பற்றி, ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்று, முதன்முதலில் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், அரசமைப்புப் பற்றிப் பேசியிருந்தார். ‘சமஷ்டி’ என்றால் தெற்கிலுள்ள மக்களும் ‘ஒற்றையாட்சி’ என்றால், வடக்கிலுள்ள மக்களும் பயப்படுவதாகச் சுட்டிக்காட்டியிருந்த ஜனாதிபதி, ஒரு நாட்டின் அரசமைப்பென்பது, நாட்டு மக்கள் அச்சப்பட வேண்டிய ஒன்றல்லவென அவர் அன்று தெரிவித்திருந்தார். ‘சமஷ்டி’ என்றும் கூறவேண்டாம் ‘ஒன்றையாட்சி’ என்றும் கூறவேண்டாம் என்பதே அந்த உரையின் அர்த்தமாகும். அவரது இந்த உரை, அரசமைப்பு வரைவிலும் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஜனாதிபதியும் முன்னின்று இதனை நிறைவேற்றப் பாடுபட வேண்டும்.
இந்த விடயத்தில் ஜனாதிபதி ஒதுங்கியிருக்கும் போது, தான் மட்டும் இந்த விடயத்தில் ஏன் முன்னிற்க வேண்டுமென, பிரதமர் எண்ணக்கூடும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில், தற்போது தயாரிக்கப்பட்டுள்ள வரைவிலுள்ள உள்ளடக்கங்களை விட அதிகளவான உள்ளடக்கங்கள் அடங்கிய அரசமைப்பு வரைவுக்கான அறிக்கைகள் வெளியாகின. அவருடைய காலத்தில், மேலதிகமான விடயங்களைக் கொடுக்கத் தயாராகியிருந்துவிட்டு, தற்போது நாட்டைப் பிளவுபடுத்தப்போவதாகக் குற்றஞ்சாட்டுவதில் நியாயமில்லை. அதை விடுத்து, அவரும் இந்த அரசமைப்பு உருவாக்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
கே: மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் பற்றிய பரிந்துரைகளைக் கொஞ்சம் விளக்கினால்...
மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் தான், இனப் பிரச்சினைக்கான தீர்வாகும். காரணம், இந்த நாட்டிலுள்ள தமிழ் மக்கள், எண்ணிக்கையில் சிறுபான்மையினராகவே உள்ளனர். அதனால், ஒரு ஜனநாயக நாட்டில் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்ற போது, எப்போதுமே அவை, பெரும்பான்மை பக்கமே சாரும். இருப்பினும், வடக்கு, கிழக்கைப் பொறுத்தமட்டில், தமிழர்கள் தான், எண்ணிக்கையில் பெரும்பான்மையினராக இருக்கின்றனர். அரச அதிகாரங்களை, பிராந்தியங்களுக்கு அல்லது மாகாணங்களுக்குப் பகிர்ந்தளித்தால், பெரும்பாலான விடயங்களுக்கு, மாகாணங்களுக்குள்ளேயே தீர்மானங்கள் எடுக்கப்படும். அந்த வகையில், வடக்கு, கிழக்கில், தமிழ் மக்களே அந்தத் தீர்மானங்களை எடுக்கக்கூடியதாக இருக்கும்.
சில விடயங்கள், மத்திய அரசாங்கத்தால் தான் முன்னெடுக்கப்பட வேண்டும். அவற்றை, மாகாணங்களிடம் கையளிக்குமாறு கோரவில்லை. குறித்த இடத்தில் அணை கட்ட வேண்டுமா? இந்த ஏரியில் மீன் பிடிக்க வேண்டுமா என்பதை, ஒன்பது மாகாணங்களும் சேர்ந்த தீர்மானிக்கத் தேவையில்லை. அதை, அந்த மாகாணம் மாத்திரம் தீர்மானிக்கலாம். ஆகவே இது, தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல, ஏனைய மாகாணங்களுக்கும் பொருந்தும். அரச அதிகாரங்கள், மக்களுக்கு அண்மித்த ஒரு பகுதியில் கையாளப்பட வேண்டுமென்பதே எமது கோரிக்கையாகும். இதில், நிறைய நன்மைகள் உள்ளன. இதனால், மக்கள், நேரடியாக அரச அதிகாரங்களில் கையாளக்கூடிய நிலைமை உருவாகும். அதிகாரங்கள் மக்களை அண்மித்திருப்பதால், ஊழல்கள் இடம்பெற வாய்ப்பில்லை. தவிர, வடக்கு, கிழக்குத் தவிர்ந்த ஏனைய ஏழு மாகாணங்களின் முதலமைச்சர்களது யோசனைகளினதும் அடிப்படையில் தான், அரசமைப்பு வரையப்பட்டுள்ளது. அவற்றையும் நாம் இதில் இணைத்துள்ளோம். இதில் இருக்கின்ற அத்தனை யோசனைகளும், அந்த முதலமைச்சர்களுடையவை ஆகும். அவர்கள் எழுவரும், இந்த யோசனைகளைச் சமர்ப்பித்த போது, ஐ.ம.சு.கூவைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். அதனால், அந்தக் கட்சியினர் தற்போது எதிர்ப்பதாகக் கூறுவதில் எந்தவொரு நியாயமும் இல்லை.
கே: புதிய அரசமைப்பு , எப்போது வரும்?
எங்களுடைய எதிர்பார்ப்பின்படி, இந்த நாடாளுமன்றத்தின் காலத்திலேயே நிறைவேற்ற முடியும். ஆனால், அரசாங்கத்துக்கு அதற்காண துணிவு இல்லாவிட்டால் கஷ்டம். இரண்டு பிரதான கட்சிகள் ஒன்றுசேர்ந்தால், அது சாத்தியப்படும். அதனால் தான், ஜனாபதியாக சு.கவின் தலைவரும் பிரதமராக ஐ.தே.கவின் தலைவரும் இருக்கும் இந்தக் காலத்திலேயே, புதிய அரசமைப்பை நிறைவேற்றுவதற்கான கடும் பிரயத்தனத்தைக் காட்டி வருகின்றோம். காரணம், நம் நாட்டு சரத்திரத்தில், இரண்டு பிரதான கட்சிகள், இந்த விடயத்தில் ஒத்துழைத்தது இல்லை. அதனால் தான், நாடாளுமன்றம் முடிகிறதோ முடியவில்லையே, செய்யவேண்டியவற்றை செய்வோமென்று, நாம் வலியுறுத்தி வருகின்றோம். தற்செயலாக, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், இதுவோர் இணக்கப்பட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட வரைவு என்பதால், தொடர்ச்சியாக அதற்கான பணிகளை முன்னெடுப்பதில் சிக்கல் இல்லை.
கே: இந்த நாடாளுமன்றத்தின் காலத்தில், புதிய அரசமைப்பை நிறைவேற்றுவதில் ஏதேனும் சட்டச் சிக்கல்கள் இருக்கின்றனவா?
இல்லை. ஆனால், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம். பின்னர், சர்வஜன வாக்கெடுப்புக்காக விடப்பட வேண்டும். இப்போதுள்ள அரசாங்கத்துக்கு, மூன்றில் இரண்டு மாத்திரமன்றி, சாதாரண பெரும்பான்மை கூட இல்லை. ஆனால், அவ்வாறான சந்தர்ப்பத்தில் தான், மிகச் சிறப்பான ஓர் அரசமைப்பை உருவாக்க முடியும். காரணம், ஒரு கட்சியினுடைய நலனைப் பார்த்துச் செய்யப்பட்ட அரசமைப்புச் சட்டங்கள் தான் எங்களிடம் உள்ளன. 72ஆம் ஆண்டு அரசமைப்பு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியால் உருவாக்கப்பட்டது. இதன்போது அதை, ஐ.தே.க எதிர்த்திருந்தது. 78ஆம் ஆண்டு அரசமைப்பு, ஐ.தே.க கொண்டுவந்தது. அதை, சு.க எதிர்த்திருந்தது.
இப்போதுள்ள அரசமைப்புத் திருத்தங்களைப் பார்த்தோமானால், முன்னேற்றமான திருத்தங்களாக, 17, மற்றும் 19 அமைந்துள்ளன. இவை, அரசாங்கத்துக்குப் பெரும்பான்மை இல்லாத சந்தர்ப்பத்திலேயே செய்யப்பட்டன. சந்திரிகா அரசாங்கத்துக்குப் பெரும்பான்மை இல்லாத போது தான், 17ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன்போது, ஒரேயோர் உறுப்பினர் மட்டும் தான் நடுநிலை வகித்திருந்தார். ஏனைய அனைவரும், ஆதரவாக வாக்களித்தார்கள். 19ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்ட போது, அரசாங்கத் தரப்பில், 48 உறுப்பினர்கள் தான் இருந்தார்கள். ஆனால், ஆளுந்தரப்பு, எதிர்த்தரப்பு என அனைவரும், ஆதரவாக வாக்களித்தனர். ஒரேயொருவர் மாத்திரம் தான், எதிர்த்து வாக்களித்தார்.
அதனால், மிக முக்கியமாக, முன்னேற்றகரமான அரசமைப்புத் திருத்தங்கள் அனைத்தும், அரசாங்கத்துக்குப் பெரும்பான்மை இல்லாத சந்தர்ப்பத்தில் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவ்வாறான சந்தர்ப்பத்தில் தான், அனைவரது ஒத்துழைப்புடன், முன்னேற்றகரமான விடயங்கள் நடந்தேறின. ஆகையால், இந்தப் புதிய அரசமைப்பை நிறைவேற்றுவதற்கு, அரசாங்கத்துக்குப் பெரும்பான்மை இல்லாதிருப்பது தான் நல்ல சகுனம். இதனால், மிக முன்னேற்றகரமான அரசமைப்பை உருவாக்கக்கூடியதாக இருக்கும்.
கே: புதிய அரசமைப்பை நிறைவேற்றுவதற்கான, அடுத்தகட்ட படிமுறைகள் என்ன?
வழிநடத்தல் குழுவால் முதலில், அரசமைப்புக்கான சட்டமூலமொன்று தயாரிக்கப்பட வேண்டும். அதற்கு அரசமைப்புப் பேரவையில், மூன்றில் இரண்டுப் பெரும்பான்மை கிடைக்கின்றதா என்று பரிசோதித்துப் பார்க்க வேண்டும். பெரும்பான்மையே இல்லாமல் தோற்கடிக்கப்பட்டால், அத்தோடு அந்த முயற்சி கைவிடப்பட வேண்டும். ஆனால் அது, சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டால், சில திருத்தங்களை மேற்கொண்டு, மூன்றில் இரண்டுக்காக மீண்டும் கொண்டுவருவதற்காக, வழிநடத்தல் குழுவிடம் கையளிக்க வேண்டும். அதன் பின் அது, மூன்றில் இரண்டுடன் நிறைவேற்றப்பட்டால், உத்தேச அரசமைப்புச் சட்டமூலமாகக் கொண்டுவருவதற்காக, அது அப்படியே, அரசாங்கத்திடம் கையளிக்கப்படும்.
“இந்தச் சட்டமூலம், தற்போது இருக்கின்ற அரசமைப்பை முற்றாக நீக்கி, அதற்குப் பதிலீடாக, நாடாளுன்றத்தில் மூன்றில் இரண்டுப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும். இது மக்களிடம், சர்வஜன வாக்கெடுப்புக்காக விடப்படும்” என்று கூறிய சான்றிதழொன்று, அமைச்சரவையால் எழுதப்பட வேண்டும். பின்னர் அது, நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டு, மூன்றில் இரண்டுடன் நிறைவேற்றப்பட்டு, சர்வஜன வாக்கெடுப்புடன் சட்டமாக்கப்பட வேண்டும். அன்று முதல், இந்தப் புதிய அரசமைப்பு தான், நாட்டில் அமுலில் இருக்கும்.
28 minute ago
37 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
37 minute ago
48 minute ago