2024 மே 04, சனிக்கிழமை

“இறுதிவரைப் போராடியே மடிந்தவர் பிரபாகரன்”

Freelancer   / 2022 பெப்ரவரி 21 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

“இறுதிப் போரில் பிரபாகரன் சரணடையவில்லை. அவரை இராணுவத்தினர் உயிருடன் பிடிக்கவும் இல்லை. இறுதிப் போர்க் களத்தில் அவர் இறுதி வரைப் போராடியே உயிரிழந்தார்.”

- இவ்வாறு முன்னாள் இராணுவத்தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த பின்னரே உயிரிழந்தார் என்று யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார். 

இந்தக் கருத்துத் தொடர்பில் இறுதிப் போரில் இராணுவத் தளபதியாகப் பதவி வகித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பிரபாகரனின் சாவை வைத்து அன்று தொடக்கம் இன்று வரை சிலர் அரசியல் செய்து வருகின்றனர். இராணுவத்தினருடனான நேரடி மோதலிலேயே பிரபாகரன் உயிரிழந்தார் என்பது உண்மை. அவரின் வெற்றுடலையே இராணுவத்தினர் மீட்டனர். 

பிரபாகரன் ஒரு பயங்கரவாதக் குழுவின் தலைவர். எனினும், அவர் சிறந்த போர் வீரன். அதனால் அவர் மீது எனக்குத் தனிமரியாதை உண்டு. 

பிரபாகரனை உயிருடன் பிடிக்க வேண்டும் என இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் விரும்பின. அந்த நாடுகள் இலங்கை அரசுக்கு அன்று அழுத்தமும் கொடுத்திருந்தன. எனினும், பிரபாகரன் எந்தத் தரப்பிடமும் சிக்காமல் இறுதி வரைப் போராடியே சாவடைந்தார்” - என்றார். (K)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .